தொழிலாளர்களுக்கு வரப்பிரசாதங்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோம் – மைத்திரிபால

நாட்டில் சிறந்த பொருளாதார வளம் காணப்பட்டால் தொழிலாளர்களுக்கான வரப்பிரசாதங்களை வழங்குவதிலிருந்து எந்தவொரு அரசாங்கமும் பின்வாங்காது.

எனவே பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் ஊடாக தொழிலாளர்களுக்கான வரப்பிரசாதங்களை பெற்றுக்கொடுக்க சுதந்திர கட்சி அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சுதந்திர கட்சி மற்றும் 8 தொழிற்சங்கள் இணைந்து அரசாங்கத்திடம் 21 யோசனைகளை முன்வைக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை சுதந்திர கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கொவிட் பரவலின் காரணமாக உலக நாடுகளைப் போன்று இலங்கையின் பொருளாதாரத்திற்கும் பாரிய சவால் ஏற்பட்டுள்ளது.

திட்டமிடப்பட்டிருந்த அபிவிருத்திகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே சர்வதேச தொழிலாளர் தினத்தில் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதோடு தேசிய உற்பத்தி பொருளாதாரத்திற்கும் பங்களிப்பை வழங்குவோம்.

எனவே அரசாங்கமானது சகலருடனும் ஒன்றிணைந்து இதற்கான தீர்வுகளைக் காண முயற்சிக்க வேண்டும். இதற்கு நட்புறவுடன் சுதந்திர கட்சி முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளது.

இதன் ஊடாக தொழிலாளர்களுக்கான வரப்பிரசாதங்களை பெற்றுக் கொடுக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். எனவே தற்போது முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம் என்றார்.