அரபிக் கடலில் உருவாகியுள்ள ‘தாக்டே’ புயல் காரணமாக குஜராத் மற்றும் டையூ கடலோரப் பகுதிகளில் புயல் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு துறை இன்று காலை தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய அரபிக் கடலில் லட்சத்தீவு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்திற்குள் புயலாக மாறும் என்று நேற்று இரவு இந்திய வானிலை ஆய்வுத்துறை தெரிவித்திருந்தது.
இந்த புயல் வடமேற்கு திசையில் பயணித்து குஜராத் அருகே மே 18ஆம் தேதி கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.
இன்று காலை 9:20 மணிக்கு இந்திய வானிலை ஆய்வுத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி அடுத்த 12 மணி நேரத்தில் இந்தப் புயல் தீவிரப் புயலாக மாறும் என்றும், அதற்கு அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிரப் புயலாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 18 ஆம் தேதி பகல் / மாலைக்குள் குஜராத் மாநிலம் போர்பந்தர் மற்றும் நாலியா ஆகிய பகுதிகளுக்கு இடையே கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்து.
தாக்டே புயல் காரணமாக கேரளம், தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கரையோரப் பகுதிகளுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையின் 24 குழுக்கள் அனுப்பப்படும் என்றும், 29 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன என்றும் அதன் தலைமை இயக்குநர் சத்ய பிரதான் தெரிவித்துள்ளார்.
தாக்டே புயல் காரணமாக கேரளம், லட்சத்தீவு, தமிழ்நாடு, கர்நாடகம், கோவா, குஜராத், தென்கிழக்கு ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும் என்றும் மே 15, 16, 17 ஆகிய தேதிகளில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் கனத்த மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மே 15ஆம் தேதி லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் கனத்த மழை முதல் மிகவும் கனத்த மழை வரை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.