தேசிய பாதுகாப்பு குறித்து பேசும் அரசாங்கம் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் வரும் வரை ஏன் அமைதி காத்தது ? – சஜித்

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றி எரிந்தமை தொடர்பில் பக்கச் சார்பற்ற விசாரணை  மேற்கொண்டு உண்மையை வெளிப்படுத்தவேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் தேசிய பாதுகாப்பு குறித்து அடிக்கடி பேசும் அரசாங்கம், இலங்கை கடல் பரப்பிற்குள் இதுபோன்ற ஆபத்தான கப்பல் வரும் வரை ஏன் அமைதியாக இருந்தது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் இருந்து சில கடல் மைல் தூரத்தில் எக்ஸ்பிரஸ் பெர்ல் கப்பல் தீப்பிடித்து எரிந்துள்ளமை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொழும்பு துறைமுகத்திலிருந்து கிட்டத்தட்ட ஒன்பது கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில்  எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ பிடித்து எரிந்தமை குறித்து  பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ளவேண்டியதன்  அவசியத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

கப்பல் மே 10 கட்டார் “ஜபல் அலி” துறைமுகத்திலிருந்து 25 மெட்ரிக் டொன் நைட்ரிக் அசிட் அடங்களான 1486 கொள்கலன்களை ஏற்றிக்கொண்டுள்ளது.

இலங்கைக்கு ஆயிரக்கணக்கான கடல்மைல் தொலைவில் அரபுக்கடலில் வைத்து,  இரண்டு கொள்கலன்களில் இருந்து நைட்ரிக் அமிலம் கசிவதை கப்பல் சேவையாளர்கள் அறிந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அமில கசிவைத் தொடர்ந்து, கப்பல் கட்டாரில் உள்ள ஹமாத் துறைமுகத்திற்குள் நுழைய முயன்றது, ஆனால் அமில கசிவு காரணமாக கத்தார் அரசு அதை துறைமுகத்திற்குள் நுழைய அனுமதிக்கவில்லை.

அப்படியானால், இவ்வாறு அவதனாம் இருக்கும் சந்தர்ப்பத்தில் இலங்கையின் கடல் பரப்பிற்குள் திடீரென நுழைந்திருக்க முடியாது.

அப்படியாயின் இலங்கையின் கடல் பரப்பிற்குள் நுழைய அது எவ்வாறு அனுமதி பெற்றது, யாரிடமிருந்து பெற்றது?  என்பது தொடர்பில் இப்போது ஒரு தீவிரமான கேள்வி எழுந்துள்ளது.

தேசிய பாதுகாப்பு குறித்து அடிக்கடி பேசும் அரசாங்கம், இலங்கை கடல் பரப்பிற்குள் இதுபோன்ற ஆபத்தான கப்பல் வரும் வரை ஏன் அமைதியாக இருந்தது?

இந்த தீ விபத்து கடல்சார் அமைப்புகள் உட்பட முழு கடல் சூழலுக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கப்பல் கட்டார் மற்றும் இந்தியத் துறைமுகங்களுக்கு நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக வெளிவந்த சர்வதேச செய்தி குறித்து நாங்கள் விஷேட கவனம் செலுத்தியுள்ள துடன்  இந்த சம்பவம் காரணமாக  சில சிறப்பு பிரச்சினைகள் எழுகின்றன.

குறிப்பாக தீ பற்றியதன் காரணமாக குறித்த  கடல் பகுதிக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துவது மற்றும் பல நேரடி மற்றும் மறைமுக சிக்கல்களை உருவாக்குவதை தவிர்க்க முடியாது.

இதன் காரணமாக, மீன்பிடித் தொழில் கடுமையாக பாதிக்கப்படும். இந்த கடல் பகுதியில் ஏற்பட்ட இரசாயன கசிவு காரணமாக அங்கு பிடிக்கப்படும் மீன்கள் உணவுக்காக எடுத்துக்கொள்வது ஆபத்தானது என விசேட நிபுணர்களின் நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் சுமார் ஒரு மில்லியன் மக்கள் வேலை இழந்துள்ளனர், தற்போது கப்பலில் ஏற்பட்டுள்ள அமில கசிவு காரணமாக மேலும் லட்சக்கணக்கானவர்களின் தொழில் ஆபத்தில் உள்ளது.

இந்தியாவிலிருந்து கொள்கலன்கள் அந்த கப்பலுக்கு பரிமாறப்பட்டதாக கூறப்படுவதால் இந்திய உருமாறிய வைரஸ் பரவல் இலங்கைக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இரசாயன பொருட்களுடன் எரிபொருட்கள் கடற்கரையில் ஒன்று சேர்வதால்,  பவளம் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்களுக்கு கடுமையான சேதம் ஏற்படக்கூடும் என்றும் கடல் திட்டுகள் மற்றும் சூழவுள்ள அதிக அளவு பிரதேசங்களில் வழி மாசடையும் அபாயம் ஏற்படும் என்பது நிபுணர்கள் நிலைப்பாடாகும்.

குறிப்பாக, இந்த சம்பவம் தொடர்பாக ஒன்றுக்கொன்று முரண்பாடான கருத்துக்களை அரசாங்கத்தில் இருப்பவர்களே தெரிவிப்பதனால்,  இந்த சம்பவம் தொடர்பில் பாரிய சிக்கலை ஏற்படுத்துவதற்கு காரணமாகி இருக்கின்றது.

குறித்த கப்பல் யாருடைய அனுமதியுடன் இலங்கை கடல் பரப்பிற்குள்  பயணித்தது?  இந்த கப்பல் இலங்கையின் கடல் அமைப்புக்குள் நுழையும் என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு முறையா அறிவித்தா?  அதற்கான பொறுப்பை யார் ஏற்றுக்கொள்வார்கள் ? இதனால் ஏற்பட்டிருக்கும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு கப்பல் உரித்துடைய நிறுவனம் இலங்கைக்கு எவ்வளவு தொகை இழப்பீடு வழங்க வேண்டும்?  சேதத்தை யார் மதிப்பிடுவார்கள்? இழப்பீடு கிடைப்பதில் நம்பகத்தன்மை இருக்கின்றதா?

ஏனெனில் கடந்த செப்டம்பரில், நியூ டயமண்ட் என்ற கப்பல் இலங்கையின் கிழக்கு கடற்கரையிலிருந்து 38 கடல் மைல் தொலைவில் தீப்பிடித்தது எரிந்தது.

இதற்கான இழப்பீடாக மில்லியன் கணக்கான டொலர்கள் வழங்கப்பட்டது என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பணம் பெறப்பட்டதா இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

எனவே இந்த விடயங்கள் அனைத்திலும் விசேட கவனம் செலுத்தி, பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி, உண்மையை வெளிப்படுத்துமாறு நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறோம்.