நாளை காலை 08.00 மணி முதல் யாழ் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற யாழ்மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு தொடர்பான முன்னேற்பாட்டு குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாடுபூராகவும் கொரோனாநோயிலிருந்து மக்களை பாதுகாக்கும் முகமாக அரசாங்கத்தினால் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு அங்கமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நாளை காலையிலிருந்து பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடானது முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த செயற்பாடானது வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரது வழிகாட்டலுக்கு இணங்க இந்த தடுப்பூசி வழங்கும் செயற்பாடானது முன்னெடுக்கப்படவுள்ளது.
நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பபடவுள்ளது. காலை 8 மணியிலிருந்து ஒரு மணி வரை ஒரு அமர்வும் அதன் பின்னர் இரண்டு மணியிலிருந்து இரவு 8 மணி வரை இன்னொரு அமர்வும் ஆக இந்த தடுப்பூசி வழங்கும் செயற்பாடானது முன்னெடுக்கப்படவுள்ளது
தடுப்பூசியினை வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகளை யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் மாகாண பணிப்பாளர் முன்னெடுத்துள்ளார்.
எனினும் பொதுமக்கள் அனைவருக்கும் கட்டம் கட்டமாக தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள ஏற்றவாறான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எனினும் பொதுமக்கள் தங்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு என ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு மாத்திரம் அந்த இடங்களுக்கு வருகை தந்து தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளமுடியும். அத்தோடு கிராம அலுவலர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களினால் தங்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது என கோரிக்கை விடுத்தால் மாத்திரமே நீங்கள் தடுப்பூசி வழங்கும் இடத்திற்கு செல்ல வேண்டும்.
எனவே நீங்கள் தேவையில்லாது அலையாது தங்களுக்குரிய வழிகாட்டல் கிடைத்த பின்னர் நீங்கள் தடுப்பூசியினை பெற செல்லும் இடத்திற்கு செல்ல முடியும் எனத் தெரிவித்ததோடு, மேலும் தற்போதுள்ள கொரோனா ஒழிப்பு செயற்பாட்டிற்கு யாழ்ப்பாண மாவட்ட மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றார்கள் அந்த ஒத்துழைப்பினை நாம் தொடர்ச்சியாக எதிர்பார்க்கின்றோம் யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்த வரைக்கும் பொது மக்கள் முகக்கவசம் அணிந்து தற்போது பயணத்தடை வேளையிலும் வீதிகளில் நடமாடாது ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள் அதேபோல் தொடர்ச்சியாக இந்த ஒத்துழைப்பினை பொதுமக்கள் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றேன்.
நான் மட்டுமல்ல யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாகாண பணிப்பாளர் ஆகியோர் சார்பிலும் பொது மக்களிடம் ஒரு வேண்டுகோளை விடுக்க விரும்புகின்றேன். பொதுமக்கள் தற்போது எமக்கு ஒத்துழைப்பு வழங்குவது போல் எதிர்காலத்திலும் தொடர்ச்சியாக நமக்கு இந்த நோயினை இல்லாதொழிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.