இலங்கையில் தடுப்பூசி!மனித உரிமைகள் ஆணைக் குழு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு கடிதம்

தடுப்பூசி செலுத்துதல் தொடர்பில் உரிய முன்னுரிமை பட்டியல், பொருத்தமான நடை முறைக்கு சாத்தியமான செயற்றிட்டம் ஒன்றினை உடனடியாக தயார் செய்யுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு அறிவித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய,  ஆணைக் குழுவின் தலைவர் ஜகத் பாலசூரியவின் கையெழுத்துடன் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவுக்கு கடிதம் ஊடாக இது அறிவிக்கப்பட்டதுள்ளது.

‘ கொவிட் 19 தடுப்பூசி செலுத்தும்  வேலைத் திட்டத்துக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பாக’ எனும் தலைப்பின் கீழ்  அனுப்பப்பட்டுள்ள குறித்த கடிதத்தில்,  பல அமைப்புக்கள் தற்போதைய முறைமை தொடர்பில் முறைப்பாடளித்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

 

அதனால் குறித்த முறைப்பாடுகளை விசாரிக்க வேண்டியுள்ளதாகவும், அவ்வாறான நிலையில் எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதிக்கு முன்னர்  தடுப்பூசி செலுத்துதல் குறித்த முன்னுரிமை பட்டியல் தொடர்பிலான தகவல்களை தனக்கு அறியத் தருமாறும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிவித்தல் 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு சட்ட திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய அனுப்படும் கடிதம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில்  மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

‘  கொவிட் 19 நிலைமையை கட்டுப்படுத்த, அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகளாக எஸ்ட்ரா செனிகா, ஸ்புட்னிக், சைனாபார்ம் போன்ற பல தடுப்பூசிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.  இதில்  தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நியாயமாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் இடம்பெறவில்லை என  சுகாதார சேவைகள் மற்றும் வேறு சேவைகலைச் சேர்ந்த  அமைப்புக்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு முறைப்பாடளித்துள்ளன.

இந் நிலையில், இந் நடவடிக்கைகளின் போது,  உண்மையாக நேரடியாக கொவிட் தொற்றாளர்களை எதிர்கொள்ளும் , அதனூடாக தொற்றாளர்களாக மாற வாய்ப்புள்ள குழுவினருக்கு முன்னுரிமை அளிகப்படல் வேண்டும் என  ஆணைக் குழு கருதுகிறது.

அதன்படி,  வகிக்கும் பதவி, வேறு ஊகிக்கப்பட்ட முன்னுரிமைகளை பயன்படுத்துவதை தவிர்த்து,  இந்த தொற்று நோயை கட்டுப்படுத்த நேரடியாக பங்களிப்புச் செய்யும் குழுவினர்,  அவர்களுடன்  வாழும் வயோதிபர்கள், நோய் பரவும் பிரதேசங்கள், குழுவினரை அடையாளம் கண்டு அவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் படியாக  நியாயமான செயற்றிட்டமொன்றினை பின்பற்றுவது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறோம்.’ என அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.