பாராளுமன்றில் சுயாதீனமாக இயங்கத் தயாராகும் ரெலோ, புளொட்

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்குவதற்கான நடவடிக்கைகளை அடுத்துவரும் காலங்களில் முன்னெடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம்(ரெலோ) மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (புளொட்) ஆகியன முன்னெடுத்துள்ளன.

இதற்கான முதலாவது கட்டப்பேச்சுக்கள் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனுக்கும், புளொட் தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தனுக்கும் இடையில் நடைபெற்றுள்ளதாக அக்கட்சிகளின் உயர்மட்டத் தகவல்கள் மூலம் உறுதி செய்ய முடிந்துள்ளது.

இந்த உரையாடலின்போது,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் சம்பந்தன் சுகவீன விடுமுறை எடுத்துள்ள நிலையில் தற்போது அந்தப் பாத்திரத்தினை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே வகித்து வருகின்றார்.

அத்துடன் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் மற்றும் கொறடா பதவிகளை மாற்றுவது தொடர்பில் சம்பந்தனுடன் ரெலோவும், புளொட்டும் கொள்கை அளவில் இணக்கம் கண்டுள்ள போதும் தற்போது வரையில் அது செயல்வடிவம் பெறவில்லை.

அதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கொறடா பதவியை இராஜினாமாச் செய்திருந்த நிலையில் தற்போது சுமந்திரனின் கோரிக்கைக்கு அமைவாக அப்பதவியை பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வகித்து வருகின்றார்.

இவர் இப்பதவியினை பொறுப்பேற்ற பின்னரும் பங்காளிக்கட்சிகளுக்கான நேர ஒதுக்கீடு தொடர்பிலான பாரபட்சமான நிலைமைகள் நீடிக்கவே செய்கின்றது. இறுதியாக நடைபெற்ற கூட்டத்தொடாரின் போது கூட ரெலோ தலைமை  உரையாற்றுவதற்கான நேரம் கோரியிருந்தபோதும் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் ரெலோவும், புளொட்டும் இணைந்து தாம் பாராளுமன்றில்சுயாதீனமாக செயற்படவுள்ளதாக சபாநயகருக்கு எழுத்துமூலமாக அறிவிப்பதோடு தமக்கான நேர ஒதுக்கீடு உள்ளிட்ட இதர விடயங்களை தனியாக ஒதுக்கீடு செய்யுமாறு கோரவதற்கு முதற்கட்டமாக இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 8ஆம் திகதி பாராளுமன்றக் கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை நேரில்சந்தித்து அவருடைய உடல்நலம் தொடர்பில் விசாரித்ததோடு சமகால அரசியல் விடயங்கள் சம்பந்தமாகவும் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.