புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பைடனின் அதிரடி அறிவிப்பு!

அமெரிக்காவிற்குள் முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரவேசிப்பதற்கு டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் விதித்த தடையை உடனடியாக நீக்குவதாக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்கும் முதல் நாளிலேயே அரசியலமைப்புக்கு எதிரான முஸ்லிம் நாடுகள் மீதான ட்ரம்பின் தடையை முடிவுக்கு கொண்டு வருவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அமெரிக்காவில் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து 2017 ஆம் ஆண்டே முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதற்கு தடைவிதித்திருந்தார்.

பல்வேறு சட்ட சவால்களை அடுத்து இந்த தடையை டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் மறுசீரமைத்ததுடன், 2018 ஆம் ஆண்டுக்கு ட்ரம்பின் ஆணைக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

ஜனாதிபதியின் ஆணை மூலம் இந்த தடையை இலகுவாக நீக்கலாம் என்ற போதிலும் பழமைவாதிகள் இந்த தடையை நீக்குவதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து அதனை தாமதப்படுத்தலாம் என கொள்கை வகுப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில் வெற்றிப்பிரகடன உரையை ஆற்றியுள்ள ஜோ பைடன், அமெரிக்கா ஒன்றுபட்டு, காயங்களை ஆற்றும் நேரம் வந்துள்ளதாக கூறியுள்ளார்.

பிரசாரங்கள் முடிவடைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், ஆத்திரங்கள் மற்றும் கடுமையான சொல்லாட்சிகளை ஒருபுறம் வைத்துவிட்டு ஒரு நாடாக ஒன்றுபட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டின் ஜனாதிபதியாக தேர்வுசெய்யப்பட்டமையை மரியாதையாகவும் பணிவுடனும் ஏற்றுக்கொள்கின்றேன் என ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

ஜோ பைடனுடன் இணைந்து துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட கமலா ஹரீஸ், அமெரிக்காவில் முதலாவது பெண் துணை ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றுள்ளார்

எவ்வாறாயினும் ஜோ பைடனை எதிர்த்து போட்டியிட்ட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு தோல்வியை ஏற்றுக்கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக பதவியில் இருந்த ஜனாதிபதி ஒருவர் தோல்வி அடைந்துள்ளார்.

இதேவேளை ஜனநாயக கட்சியினர் வாக்குகளை திருடிவிட்டதாக தெரிவித்து அரிசோனா மாநிலத்தில் இன்று நான்காவது நாளாக டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்காவை மீண்டும் சிறப்பான நாடாக கட்டுயெழுப்புவோம் என்ற டொனால்ட் ட்ரம்பின் வாசகத்தை கூறி கோஷமிட்டுள்ளனர்.