மூன்றாம் உலகப்போர் ஏற்படலாம்! இங்கிலாந்து இராணுவத் தளபதி எச்சரிக்கை

நாம் நிச்சயமற்ற உலகில் வாழ்வதால் புதிய உலகப்போர் கூட ஏற்படக்கூடும் என்று இங்கிலாந்தின் ஆயுத படைகளுக்கான தலைமை தளபதி ஜெனரல் சர் நிக் கார்ட்டர் எச்சரித்துள்ளார்.

லண்டனின் தேசிய இராணுவ அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது பேசிய அவர்,

2030ஆம் ஆண்டில் பிரிட்டன் இராணுவத்தில் 90 ஆயிரம் இராணுவ வீரர்கள் மற்றும் 30 ஆயிரம் ரோபோக்கள் என மொத்தமாக 1.2 இலட்சம் பேர் பணியில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இராணுவ நவீனமயமாக்கல் தேவைகளுக்காக நீண்ட கால முதலீடுகளை இராணுவம் மேற்கொள்வதற்காக நீண்டகால வரவுசெலவுத்திட்டம் தாக்கல் செய்வதற்கான அனுமதியை இந்த ஆண்டு அரசு வழங்கினால் நன்றாக இருக்கும்.

 

ஓராண்டு வரவுசெலவுத்திட்ட தயாரிப்புக்கான பணிகள் ஒரு புறம் நடந்து வருகிறது என்றாலும், வேறு வகையிலான வரவுசெலவுத்திட்ட பணிகளுக்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.

நாடு கொரோனா தொற்றால் நெருக்கடியை சந்தித்துள்ள சூழல் மற்றும் வளர்ந்து வரும் பொருளாதார தேக்க நிலை ஆகியவற்றை நினைவு கூர வேண்டும்.

நாட்டிற்கான சேவையில் உயிரிழந்தவர்களை கௌரவிக்க வேண்டும். அவற்றை மறப்பது ஆபத்து தரும். ஏனெனில் அது உண்மையில் கொடூரமான போர் ஆகும் என்றார்.