கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் இலவச கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தாது: எஸ்.பி திஸாநாயக்க

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம்  தொடர்பில் தவறான நிலைப்பாட்டை ஐக்கிய மக்கள் சக்தியினரும், மக்கள் விடுதலை முன்னணியினரும் மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளார்கள். இலவச கல்வியை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் இச்சட்டமூலம் கொண்டு வரப்படவில்லை. இச்சட்டமூலம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்தார்.

 

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து செயற்பாடுகளையும் குறுகிய அரசியல் நோக்கத்தில் இருந்து எதிர்க்கும் பழக்கத்தை முதலில் எதிர்தரப்பினர் கைவிட வேண்டும்.  பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொத்தலாவல பாதுகாப்பு சட்டமூலம் குறித்து முதலில் எதிர்க்கட்சியினருக்கு முழுமையான தெளிவு கிடையாது. ஆகையால் தான்  இச்சட்டமூலம் குறித்து அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெளிவுப்படுத்தும்  செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொத்தலாவல பாதுகாப்பு சட்டமூலம் குறித்து எதிர்க்கட்சியினர் மத்தியில் தெளிவில்லாததன் காரணமாகவே, அவர்கள் மக்கள் மத்தியில் இச்சட்டமூலம் குறித்து தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளார்கள். இலவச கல்விக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இச்சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை.

இலவச கல்வி அனைத்து மாணவர்களுக்கும் பயனுடையதாக அமைய வேண்டும் . என்பது ஜனாதிபதியின்  எதிர்பார்ப்பாக உள்ளதெனவும் கூறினார்.