அவுஸ்ரேலியா கிரிக்கெட் தொடர்: ரோஹித் சர்மா சேர்ப்பு- நடராஜன் அறிமுகம்!

அவுஸ்ரேலியா கிரிக்கெட் தொடருக்கான மூன்று போட்டிகளுக்குமான இந்திய அணியில், சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக அறிவிக்கப்பட்ட உத்தேச டெஸ்ட் அணியில், ரோஹித் சர்மா சேர்க்கப்படவில்லை. ஆனால் தற்போது ஒருநாள் மற்றும் ரி-20 போட்டிக்கான தொடரில் ஓய்வு கொடுக்க முடிவு செய்துள்ளதால் அவர் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார்.

இதேவேளை இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லியின் மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு குழந்தை பிறக்க இருப்பதால் விராட் கோஹ்லி, அடிலெய்ட் டெஸ்ட் முடிந்த உடன் இந்தியா திரும்புவார் என இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உறுதிப்படுத்தியுள்ளது.

அதேபோல, ரி-20 அணியில் முதல்முறையாக இடம்பிடித்திருந்த தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி உபாதைக்காரணமாக தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக தற்போது வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் இடம்பிடித்துள்ளார்.

இதுதவிர விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான சஞ்சு சாம்சன் ஒருநாள் போட்டிக்கான அணியில் கூடுதல் விக்கெட் காப்பாளராக சேர்க்கப்பட்டுள்ளார்.

விராட் கோஹ்லி தலைமையிலான ரி-20 அணியில், ஷிகர் தவான், மயங்க் அகர்வால், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, சஞ்சு சாம்சன், ஜடேஜா, வொஷிங்டன் சுந்தர், சாஹல், பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, தீபக் சாஹர், டி. நடராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

விராட் கோஹ்லி தலைமையிலான ஒருநாள் அணியில், தவான், சுப்மான் கில், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, மயங்க் அகர்வால், ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், பும்ரா, முகமது ஷமி, ஷர்துல் தாகூர், சஞ்சு சாம்சன், ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

விராட் கோஹ்லி தலைமையிலான டெஸ்ட் அணியில், ரோஸித் சர்மா, மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, கேஎல் ராகுல், புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, சுப்மான் கில், சகா, ரிஷப் பண்ட், பும்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ஜடேஜா, ஆர்.அஸ்வின், முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் அவுஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், மூன்று ரி-20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி, எதிர்வரும் நவம்பவர் 27ஆம் திகதி சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

0Shares