கடற்புலிகளின் மகளிர் துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் பாமா

breaking

கடற்புலிகளின் மகளிர் துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் பாமா

விடுதலைப் புலிகள் மகளிர் படையணி சந்தித்த பெருமளவான சண்டைகளில், அது தரைச் சண்டையாயினும் சரி கடற்சண்டையாயினும் சரி அவற்றிலே தனது பங்களிப்பைச் செய்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டவள் எங்கள் பாமா!

எல்லாவற்றிலுமே குறிப்பிடத்தக்க திறமையுள்ள, நிறைவான போராளியாக நாம் அவளைக் கண்டோம். நெஞ்சுக்குள் உறைந்து போன அவளது உருவமும் உறுதியான நடவடிக்கைகளும் எந்த ஒரு போராளியையும் அடிக்கடி நினைவு கூரச்செய்யும்.

“எங்கட பாமாக்காவோ?”

என்று அவளைப்பற்றிக் கூறி கண்கலங்கும் போராளிகள் அனேகம். நேற்றுவரை இந்தப் தென்னந்தோட்டங்களிலும், கடலின் உப்பு நீரிலும் கால்களை நீள நீள வைத்தபடி உலா வந்தவள். இன்று எங்கள் நினைவுக்குள் நீளமாய் உறைந்து போனாள்.

பருத்திதுறையிலுள்ள இன்பருட்டி கடற்கரை ஓரத்தில் சின்னக் குழந்தையாய் விளையாடி சிப்பிகளும் கிழிஞ்சல்களும் பொறுக்கி……… அவள் குழப்படிக்காரியாகத்தான் இருந்தாள். சண்முகசுந்தரம் ஐயாவுக்கும், இரத்தினேஸ்வரி அம்மாவுக்கும் நாலாவது பிள்ளையான அவள் சியாமளாவாக வலம்வந்து அந்த வீட்டை நிறைய வைத்தவள். 1971.03.28ல் அவள் பிறந்த போது அந்த வீடு நிறைந்துதான் போனது. சியாமளா சரியான துடியாட்டக்காரி அம்மாவுக்கு விளையாட்டுக் காட்டிவிட்டு, இன்பருட்டிக் கடற்கரை ஓரங்களில் கால்கள் மண்ணிற் புதைய, சின்னக் குழந்தையாய் தத்தித் தத்தி வருவாள். தொடுவானைப் பார்த்தபடி, எறிகின்ற அலைகளில் நனைந்தபடி நீண்ட நேரங்கள் நிற்பாள். அம்மா அவளைக் காணாது தேடிவரும் வேளைகளில் ஓடி ஒளித்து, அவளது குழந்தைக் காலக் குழப்படிகள் சொல்லிமாளாது.

அவள் தனது பள்ளிக்கூட வாழ்க்கையிலும் மிகவும் கெட்டிக்காரியாக இருந்தாள். தனது உயர்தரக் கல்வியை பருத்தித்துறை மெதடிஸ்ற் கல்லூரியில் கற்றபோது உயிரியல் மருத்துவத்தை தேர்ந்தெடுத்திருந்தாள். படிபபிலும் சரி, விளையாட்டிலும் சரி என்றுமே பின்தங்கியது இல்லை. விளையாட்டுப் போட்டிகளில் அவள் பெற்ற சான்றிதழ்கள் ஏராளம்.

இப்படி இருந்தவளது வாழ்வின் அமைதியை இந்தியப் படை நடவடிக்கைகள் குலைத்தன. அவளது அண்ணன் கடற்புலி லெப்டினன்ட் வெங்கடேஸ் வீரச்சாவைத் தழுவிக் கொண்டபோது, படிப்பை விட நாடடுப்பணி மேலாகப்பட்டது. அண்ணன் கொண்ட இலட்சியப்பணியைத் தொடர சியமளா இயக்கத்தில் இணைந்தாள்.

1989 ஆம் ஆண்டு பங்குனி மாதம் அவள் இயக்கத்துக்கு வந்தநேரம். தமிழீழத்தில் வழுக்கி விழுகிற இடமெல்லாம் இந்திய இராணுவம். புலிகளை இரவும் பகலும் சல்லடை போட்டுத் தேடிக் கொண்டிருந்த நேரம். புலிகளின் முக்கியமான நடவடிக்கைகள் யாவும் காட்டிலே மேற்கொள்ளப்பட்டன. அப்போதிருந்த சூழ்நிலையில் இயக்கத்தில் போராளிகளின் எண்ணிக்கை மிகக்குறைவு. அதுவும் பெண் போராளிகளின் எண்ணிக்கை ஒரு சில நூறுகளுக்குள் மட்டுமே. இத்தகைய சூழ்நிலையில் சியாமளா, பாமாவாக தன் பெயரை வைத்துக் கொண்டு நான்காவது பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்தாள். பயிற்சிகளில் அவள் காட்டிய திறமையும் உயர்ந்த திடமான உடல் அமைப்பும் அவளை 50 கலிபர் துப்பாக்கியின் உதவிச் சூட்டாளராக செயற்பட வைத்தது. தனது கனரக ஆயுதத்தை தோளிலே சுமந்தபடி இணைப்பிகளை (லிங்குகள்) தோளின் குறுக்காகப் போட்டபடி அவள் நடப்பது தனியான கம்பீரம்! காட்டுக்குள் நீண்ட தூரங்கள் நடந்து, காடு முறித்து, எமக்குத் தேவையான பொருட்களை நாம் சுமந்து வருவது வழக்கம் பெரும் சுமைகள் தோளை அழுத்த அந்த வேளையிலும் இவள் கலகலத்தபடி வருவாள். எங்களுக்குப் பாரங்குறைந்தது போற்தோன்றும்.

1990ம் ஆண்டின் முற்பகுதியில் இந்திய படைகள் எம் நாட்டைவிட்டு வெளியேறிய போது, காட்டில் இருந்த இருநூறு பேர் கொண்ட குழு யாழ்ப்பாணம் வந்தது. இக் குழுவில் பாமாவும் ஒருத்தியாக இருந்தாள். அன்றிலிருந்து விடுதலைப் புலிகளின் மகளிர் படையணி சந்தித்த அனேகமான சண்டைகளில் அவளது தடயங்கள் பதிந்த வண்ணமிருந்தன.

கோட்டை, பலாலி, காரைநகர், சிலாவத்துறை, பலவேகய ஒன்று, மணலாறு என்ற நீண்ட பட்டியலில் அங்குள்ள காவலரண்களில் அவளது கால்கள் அகலப்பதிந்தன.

பாமா! குறிப்பிட்ட சில காலப்பகுதியினுள்ளே இவளது வளர்ச்சி அபாரமானது. இவளின் உறுதியான செயற்பாடுகளும் நினைத்தகைச் சாதிக்கும் பண்பும் இவளைப் படிப்படியாக வளரச் செய்தன.

பலாலி காவலரண்களில் பாமா நின்றபோது அவளது செயற்பாடுகள் யாவும் மறக்க முடியாதவை. எந்த வேலையையும் எனக்கு தெரியாது என்று இவள் தலையாட்டியதை நாங்கள் காணவில்லை.

“வீட்டிலிருந்து எல்லாம் தெரிஞ்சு கொண்டே வந்தனாங்கள். இயக்கத்தில் இவ்வளவு தூரம் வளர்ந்து விட்டோம். எல்லாம் முயற்சியாலைதான்” என்று அடிக்கடி கூறுவாள்.

அவற்றை நாம் பலாலியில் நேரில் கண்டோம்.

அது 1990ம் ஆண்டின் மழைக்காலப் பகுதி. பலாலியின் செம்பாட்டுமண் மழை ஈரத்தில் பிசுபிசுத்தது. கால்கள் சேற்றில் புதைந்தன. சேற்றுக் குழம்புகளின் நடுவே இருந்த அந்தக் காவலரண் அடிக்கடி எதிரியின் தாக்குதல்களுக்கு ஆளாகிக் கொண்டிருந்தது. ஓயாமல் எறிகணைகள் விழுந்ததால், நிலம் கரியாகிப் போனது. அடிக்கடி அவ்விடத்துக்கு முன்னேற படையினர் முயற்சிப்பதும் நாம் அடித்துத் துரத்துவதும் வழக்கமான ஒரு நிகழ்வாகிப் போனது.

இத்தருணத்தில், முதல் நாள் நடந்த கடுமையான சண்டையில் பதின்னான்கு பேர் காயம் அடைந்தனர். எதிரியின் இலக்கான அந்த இடத்தில் தொடர்ந்தும் எமது குழுவை நிலை நிறுத்துவதற்கு நாம் ஒரு பொறுப்பான ஆளைத் தேடிக் கொண்டிருந்தபோது பாமாவின் செயற்பாடு நம்பிக்கை ஊட்டுவதாய் அமைந்தது.

“நான் குறூப்பை கொண்டு போறன்.”

அவள் எழுந்து சொன்னாள். இதுவரையும் பெரிய களங்களைக் கண்டவள் அல்ல அவள். ஆனால் அவளிடம் ஒரு வித்தியாசமான திறமை இருக்கத்தான் செய்தது. அவளுக்குக் கொடுக்கப்பட்ட குழுவை திறமையாகச் செயற்படுத்திய விதம் எமக்கு நிறைவைத்தந்தது. அடிக்கடி படையினருக்குத் தலையிடி கொடுப்பதும் பாமாவின் வேலையாக இருந்தது. அந்தக் காலங்களில் பலாலியின் பனை வெளிகளை ஊடறுத்தபடி எதிரியின் தேடொளி இரவைப் பகலாக்கும். மிகமிகக் கிட்டவாக தனது ஒளியைப் பாய்ச்சியபடி இருக்கும்போதெல்லாம் பாமா அதற்கு குறி வைப்பாள் அவளது ‘பிறண்’ குறி தவறியதாக நாங்கள் கேள்விப்படவேயில்லை. பயிற்சி முகாமிலும் சரி… சண்டைகளிலும் சரி அவள் நன்றாக குறிபார்த்துச் சுடும் திறமை பெற்றவளாக இருந்தாள்.

அப்படி ஒரு இடத்தில் தேடொளி உடைய, மறு இடத்தில் எதிரி அதைப் பொருத்த மீண்டும் உடைய வைத்து, உண்மையில் அவர்களைச் சலிப்படையவே செய்துவிட்டாள். அந்த நீண்ட பனைகளில் நிலையெடுத்தபடி இராணுவக் காவலரண்களை நோக்கி அடிக்கடி அருள் 89 ஐ அடிப்பாள். அது ஒரு விளையாட்டுப் போல…….. ஆனால் குறி தப்பாத ஒன்றாக அவளுக்கு இருக்கும்.

இப்படி எத்தனை நிகழ்வுகள்! பாமாவின் துடிப்பான அந்த நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் பலாலியின் புழுதி படிந்த செம்பாட்டுமண் சொல்லும் கனத்த காற்று சொல்லும்.

பலாலிக்கு பிறகு பெரிய களமாக இவளுக்கு ஆனையிறவுக்களம் அமைந்தபோது, அதிலும் தன் திறமைகளை வெளிப்படுத்தத் தவறவில்லை. ஆ.க.வெ நடவடிக்கையில் மகளிர் படையணியின் பக்கம் மும்முரமான சண்டையில் இவள் நின்றாள். உக்கிரமான மோதல், மழை போல ரவைகள் காதை உரசுவதாக வரும் மயிரிழையில் தப்பித்த எறிகணை வீச்சுக்கள்……. பாமாவின் குழுவிலும் அனேகம்பேர் காயம்பட்டுத்தான் போனார்கள். எதிரி பின்வாங்கும் வரை பாமா மட்டும் தனித்து நின்று அடிபட்டதை நினைக்கிறோம். கடைசியாக காலிலே பலத்த காயமடைந்த ஒரு போராளியை அந்தக் கும்மிருடடு நேரத்திலே கண்டுபிடித்து பின்னுக்கு கொண்டு வந்து இவள் மூச்சுவிட்ட போது தனியொருத்தியாக நின்று தடயங்கள் எல்லாவற்றையும் பொறுக்கியபோது……….

ஆனையிறவுச் சண்டையில் இவள் தலையில் காயப்பட்டாள். இவள் தப்பி வருவாள் என்பதில் எங்களுக்கு ஒரு துளியளவு நம்பிக்கையே இருந்தது. ஆனால் பாமாவின் திடமான உடல் அமைப்பும் உறுதியுமே அவளைத் தப்ப வைத்தது. மீண்டும் பழைய நிலைக்கு இயங்கவைத்தது.

நிறையக் களங்கண்ட ஒரு போராளியாக, ஒரு குறுமபுக்காரியாக, எல்லோருக்குமே உதவுகின்ற இளகிய மனம் படைத்தவளாக நாம் அவளைக் கண்டோம்.

இப்படித்தான் ஒருநாள்……..

அது லெப். கேணல் ராஜனின் வழிநடத்தலில் நடைபெற்றுக் கொண்டிருந்த அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி. அதில் இவள் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தபோது, இவளது முகாமுக்கு ஒரு சிறுமியும் சிறுவனும் சாப்பாடு கேட்டு வந்தனர். அப்போது அங்கு உணவேதும் இருக்கவில்லை. இதை அவதானித்த இவள், எல்லோரிடமும் இருக்கும் காசு எல்லாவற்iயும் சேர்க்க ஐம்பது ரூபா வந்தது. அதை அவளிடம் கொடுக்கச் சென்றபோது, அச்சிறுமியிடம்;

உங்களது பெயர் என்ன?

என்று கேட்க, அப்பிள்ளை வாய்திறக்க முடியாத நிலையில் இருந்ததைக் கண்டு இவள்….

ஏன் என்று விசாரித்தாள். விமான குண்டு வீச்சின்போது சன்னமொன்று தாடைக்குள் தாக்கியதால் வாய்திறக்க முடியாது என்ற விபரத்தை அந்தச் சிறுமி சைகை மூலம் கூற, இவளது கண்கள் குளமாகின.

அந்தக் காசைக் கொடுத்து அனுப்பிவிட்டு, “இந்தச் சின்னப் பிள்ளை என்ன பாவம் செய்தது.? இதுக்கு இவங்களிற்கு முறையான பாடம் படிப்பிக்கவேணும்” என்று சொல்லிய போது, இவளது குரல் தழுதழுத்தது. அடிக்கடி “இந்தத் கஸ்ரமெல்லாம் எங்களோட முடிஞ்சிடவேணும். எங்கட சின்னனுகள் அனுபவிக்க கூடாது. அதுகள் சந்தோசமாக தங்கட தாய், தகப்பனோட வாழனும்” என்று கூறி, அவள் கண்கள் கலங்கி தவித்ததை நினைக்கும் போது………..

அன்று படைத்துறைக் கல்லூரியில், தொலைத்தொடர்பு பற்றிய வகுப்பு, புதிய வகைகள், புதிய தொழிற்பாடுபாடுகள் நுட்பமாக ஆராய்ந்து விளக்கப்பட்டது. இறுதியாக விரிவுரையாளர் “இந்த (ci 25) வோக்கி புதிசு. இதன் தொழிற்பாட்டை நான் உங்களுக்கு சொல்லித்தரமாட்டன். நீங்கள்தான் இதை ஆராய்ந்து கண்டு பிடிக்கவேணும். குறிப்பிட்ட காலம் தருவன்;” என்று கூறி முடித்த போது பாமா அதோடு முழு மூச்சாய் அதனோடு ஒன்றி அதன் தொழிற்பாட்டை அறிவதில் நேரங்காலம் இல்லாது கண்ணாய் இருந்ததை இப்போது நினைத்தாலும்……………..

அந்த முயற்சியில் அவள் வெற்றி பெற்றாள். அதன் தொழிற்பாட்டை, முதலில் கண்டு பிடித்து விளங்கப்படுத்தினாள். அப்போது எல்லாப் போராளிகள் மத்தியிலும் இவளின் திறமை வெளிப்பட்டது. இவளின் விடாமுயற்சியை நாம் எங்களுக்குள் சொல்லிச் சொல்லி வியந்து போனோம்.

சதுரங்கம் விளையாடுவது இவளுக்கு பிடித்தமான ஒரு விளையாட்டு. நுட்பமாகவும் திறமையாகவும் அவன் விளையாடுவது யாவரையும் வியக்கவைக்கும். பார்ப்பவரைப் பார்த்துக் கொண்டு நிற்க வேண்டும் போல நினைக்கத் தூண்டும். அவளின் இராசாவும் இராணியும் தோற்றதாக வரலாறு இல்லை. அந்தளவுக்கு எதிரே விளையாடுபவரை விழுத்துவதில் குறியாக இருப்பாள். அவளின் இன்னொரு விருப்பமான விளையாட்டு கரப்பந்தாட்டம். மாலை நேரத்தில் அவள் விளையாட வந்துவிட்டாள் என்றால், விளையாட்டுத்திடல் கலகலத்துப்போகும். தள்ளி எட்டி ஓடி ஓடி அடிப்பது அவளுக்கொரு கலையாகத்தான் இருந்தது.

இவளது குறும்புகளுக்கும் குறைச்சலில்லை. நேரங்காலம் பாராமல், சுற்றி நிற்பவர்களை வயிறு குலுங்க சிரிக்கவைத்து விட்டு நழுவிவிடுவாள்.

ஒரு தடவை இவளது தோழியும் ஒரு உந்துருளியில் இரவு ஒன்பது முப்பது மணியளவில், வடமராட்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டு இருந்தனர். அவளது உந்துருளியில் வெளிச்சம் மிகவும் மங்கலானது. பாதை தெளிவாகத் தெரியவில்லை. புறாப்பொறுக்கியடியில் வந்துகொண்டிருந்தபோது ஒரு சரக்குந்துருளி மிகுதியான ஒளியைப் பாய்ச்சியபடி எதிர்ப்பக்கமிருந்து வந்துகொண்டிருந்தது. பாமா உடனடியாகத் தனது வெளிச்சத்தை அணைத்துவிட்டு கையைமேல் நோக்கிக் காட்டினால். உடனே சரக்கு உந்துருளியின் ஓட்டுனர், உலங்குவானூர்த்தி வருவதாக எண்ணி, தனது வெளிச்சத்தை அணைத்துவிட்டு, ஓரமாக வாகனத்தை நிறுத்தவும், இவள் தனது உந்துருளியை வேகமாக ஓட்டிச்சென்று விட்டாள். இப்படி நான்கு, ஐந்து வாகனங்களை நிறுத்தி, அந்த இடைவெளியைப் பயன்படுத்தி தன் வாகனத்தை ஓட்டினாள். முனியப்பர் கோயிலடியில் செல்லும்போது ஒரு வாகனம் வர அதற்கும் அவள் மேல்நோக்கி கையைக் காட்டி நிறுத்திய பின்னர்தான் பார்த்தாள், அது எமது போராளிகளின் வாகனம். ஒரு நிமிடம் அதிர்ந்து போனாலும் உடனே விறுவிறு என்று உந்துருளியை அதிவேகமாக ஒட்டியபடி வந்து சேர்ந்து. சிரிசிரிஎன்று சிரித்த பாமா, இப்போதும் கண்ணுக்குள்ளேதான் நிற்கின்றாள்.

இவளுக்கு எதுவும் ஏறுமாறாகச் சொல்லி கோபபட வைப்பது எங்களுக்கு பெரிய விளையாட்டுப்பார்த்தாக இருக்கும். எதற்காவது இவளுக்கு கோபம் வந்தால் கடகடவென்று பேசிவிட்டு அடுத்த நிமிடம் மறந்து போய் நின்று சிரிப்பாள். பேசுவது முழுக்க அடுக்கு மொழியில் தான். கதைக்கும் போது வேகமாக கதைப்பதால் அவளது கதை மற்றவர்களுக்கு விளங்குவது கடினம். அதனால் அவளை ‘நடுங்கல்’ என்று கேளிசெய்வோம். இப்படிக்கேலி செய்தால் ஓடித்தூரத்தி அடித்துவிடுவாள்.

1992.03.01 இல் விடுதலைப் புலிகளின் மகளிர் படையணி தன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அத்திவாரமிட்டது. அன்று கடற்புலிகள் மகளிர் அணி தோற்றம் பெற்ற நாள். எங்கள் தலைவரின் கனவுகளுக்கு அபார நம்பிக்கை ஊட்டும்படியாக கடற்புலிகளின் வளர்ச்சியில் பாமா வகித்த பங்கு அளப்பரியது.

1992ம் ஆண்டின் பிற்பகுதியில் பாமா கடற்புலிகளின் அணியில் தன்னை இணைத்துக் கொண்டாள். அன்றிலிருந்து கடற்புலிகள் மகளிர் படையணியை வளர்ப்பதில் அவள் தீவிர அக்கறை செலுத்தினாள். சகபோராளிகளுக்கு அணிநடை பழக்குவதிலிருந்து முக்கியமான வகுப்புக்களை எடுப்பது வரை, எல்லாவற்றிலும் பங்கேற்றாள். தலைமையேற்று நடத்தினாள்.

கிளாலில் மக்கள் பாதுகாப்புக்காக எம்மால் நடத்தப்படும் பாதுகாப்புப் பணியில், இவளுடன் ஒரு குழு பங்களித்துக் கொண்டிருந்தது. கிளாலிக் கடலில் கொட்டும் பனியிலும், மழையிலும் ஊசியாகக் குத்தும் உப்புக் காற்றின் மத்தியிலும் அவள் விடிய விடிய காத்திருந்த காலங்களை நினைக்கின்றோம். தூரத்தே புள்ளியாய் விசைப்படகுகள் தெரியும். கடற்பரப்பில் மக்களின் படகுகள் ஆடிச் செல்லும். நெஞ்சு நீரற்று வரண்டு போய் கண்கள் பீதியாய் வழிய துயரப்படும் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டிய கடற் சண்டைகளில் பாமா பங்கேற்றதை நினைக்கிறோம்.

‘நீ வீட்டில் மிகுந்த பிடிவாதக்காரியாய் இருந்தாயாமே? நினைத்ததைச் செய்து முடித்து நினைத்ததை வாங்கித் தரும்படி அந்தப் பிடிவாதம்தான் கடலிலும் உன்னைச் சாதிக்க வைத்ததோ….

“வோட்டர் ஜெட்டை ஏன் நீங்கள் எடுக்கவில்லை?” என்று பாமாவின் மாமா கேட்ட பொழுது “மாமா அதைக் கொண்டு வந்து விட்டுதான் உங்களுடன் கதைப்பேன்”. என்று கூறினாளாம். இதைக் கண்கலங்கியவாறு மாமா கூறினார். நினைத்ததைச் சாதித்து முடிக்கும் அந்த இயல்பு பாமாவுடன் கூடப்பிறந்தது. என்பதை நாம் பல நிகழ்வுகளில் கண்டோம்.

இத்தகைய நினைத்ததைச் சாதிக்கும் பண்புதான் சாவின் இறுதிக் கணங்களிலும் அவளை இறுகப் பற்றியிருந்து.

பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான தாக்குதல் திட்டமிடப்பட்டது. இத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் மகளிர் படையணி முக்கிய பங்கேற்றது. இந்தச் சமரில் கடற்புலிகளின் பங்கு அளப்பரியது.

அந்த வகையில் நாகதேவன்துறையில் கடற்படைத்தளம் மீதான தாக்குதலுக்கு, ஒரு படகுப் பொறுப்பாளராக பாமா அனுப்பப்பட்டாள். சண்டைக்குத் தனது படகைத் தயார் படுத்திக் கொண்டிருந்த பாமா கரையில் நின்ற போராளிகளிடம் ஆளை ஆள் தெரியாத இருளில், நம்பிக்கை தொனிக்க, “இந்தச் சண்டையிலே நாங்கள் வோட்டர் ஜெட் ஒண்டைக் கொண்டு வருவோம்” என்று சொல்லிவிட்டுப் போனாள். சொன்னபடி நாகதேவன் படைத்தளத்தை தகர்த்துவிட்டு ஒரு நீருந்து விசைப்படகோடு முகமெல்லாம் சிரிப்பாக வெற்றிப் பூரிப்போடு கரைக்கு வந்தாள்.

அதிகாலை திரும்பவும் அவளை வருமாறு தொலைத்தொடர்பு கருவி கூப்பிட்டது. எல்லா ஆயுதங்களுடனும் அவளது படகு ஒரு குருவியைப் போல புறப்பட்டுப் புள்ளியாய்ப் போனது. ஏதோ ஒன்று அவளிடம் வித்தியாசமாகத் தென்பட்டது. வழமைக்கு மாறாக ஏதையோ கூற நினைப்பது போல அவளது கையசைப்பு அந்த இருளில் மங்கலாகத் தெரிந்தது. காற்றைக் கிழித்தபடி ஓயாத ரவைகள். காதை உரசுவதான அவற்றின் சத்தங்கள். அவைகளின் மத்தியில் அவளது படகு தூரத்தே மறைவதைப் பார்த்துக் கொண்டிருந்தோம். கடலலைகள் ஆர்த்தெழுந்து படகை மறைத்தன. நிலவை விழுங்கிய வானத்தில் ஒளிப்பொட்டாய் விளங்கிய நட்சத்திரங்கள். வானம் அமைதியாகத்தான் இருந்தது. கனதியான குண்டுச் சத்தங்கள் கண்ணிமைக்கும் இடைவெளியில் அதற்கும் இடைவிடாத நேர இடைவெளிகளில் ஓசைகள் கேட்டு கொண்டே இருந்தன.

“பாமா… பாமா வோக்கி கூப்பிட்டது. விரைவாக தொடர் எடுக்க முயன்று தோற்றுப் போய் ……

ஒரு ரவை அவளது காலை ஆழமாக பிய்த்துச் சென்றது. பீறிட்ட இரத்தக்குளியலில் பாமா வீழ்ந்த போது………..

மீண்டும் மங்கலான குரலில் அவள் கட்டளை பிறப்பித்துக் கொண்டுதான் இருந்தாள். மெல்ல மெல்ல குரல் மங்கி, துடிப்படங்கி…….

“காலிலைதான் காயம் என்று……. பிரச்சனை இல்லை என்ற எங்கள் எல்லலோரினதும் நம்பிக்கைகளை பொய்யாக்கிக் கொண்டு மெல்ல மௌனித்துப் போனாள். அந்தப் பிடிவாதக்காரி. உப்புக் கரிக்கும் கடல் நீரேரியில் கலந்து போனாள். கிளாலிக் கடல் உதிரத்தில் தோய்ந்தபடி மீண்டும் மீண்டும் பொங்கியெழுந்தது.

ஆயிரம் ஆயிரம் மாவீரர்களோடு எங்கள் பாமா, விடுதலையின் பெருநெருப்பை சுவாசித்தபடி….. வெற்றியின் வேராய் உறங்கட்டும் அமைதியாய்…

நினைவுப்பகிர்வு:- சுதாமதி.
களத்தில் இதழ் (16.09.1994).