கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்யும் விவகாரம்- ஐநா பிரதிநிதி மகிந்தவிற்கு கடிதம்

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவதற்கான ஒரே வழி அவர்களின் உடல்களை தகனம் செய்வதே என்ற இலங்கையின் சுகாதாரஅமைச்சின் வழிகாட்டுதல்கள் குறித்து ஐநா கரிசனை வெளியிட்டுள்ளது.
ஐக்கியநாடுகளின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த கரிசனையை வெளியிட்டுள்ளார்.


கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கான தற்போதைய தடை வெகுவிரைவில் மறுஆய்விற்கு உட்படுத்தப்படலாம் என ஊடகங்களில் வெளியான அறிக்கைகளை நான் ஆர்வத்துடன் தொடர்ந்து அவதானித்து வருகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சூழமைவில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவதற்கான ஒரே வழி அவர்களின் உடல்களை தகனம் செய்வதே என்ற இலங்கையின் சுகாதாரஅமைச்சின் வழிகாட்டுதல்கள் குறித்த ஐக்கியநாடுகளின் கரிசனையை வெளியிடுவதற்கான சந்தர்ப்பத்தினை நான் பயன்படுத்த விரும்புகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

தொற்றுநோய்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை தொற்று பரவுவதை தடுப்பதற்காக தகனம் செய்யவேண்டும் என்ற பொதுவான நம்பிக்கை ஆதாரங்கள் எவற்றினையும் அடிப்படையாக கொண்டிராதது என அவர் தெரிவித்துள்ளார்.
தகனம் என்பது சமூகத்தின் தெரிவு என குறிப்பிட்டுள்ள அவர் காணப்படும் வளங்களை பொறுத்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.


கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை,உள்ளுர்தராதரங்கள் குடும்பவிரும்பங்களின் அடிப்படையில், உடல்களை கையாள்வதற்கான பொருத்தமான நெறிமுறைகளுடன் தகனம் செய்யலாம் அல்லது புதைக்கலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது எனவும் ஐநாவின் நிரந்தரவதிவிடப்பிரதிநி தெரிவித்துள்ளார்.
இந்த சூழமைவின் அடிப்படையில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதை பாராபட்சமான நடவடிக்கையாக கருதி இலங்கைக்கு உள்ளிருந்தும் வெளியேயிருந்தும் என்னிடம் விடுக்கப்பட்டுள்ள உணர்ச்சிபூர்வமான வேண்டுகோள்கள் குறித்து நான் உங்களிற்கு சுட்டிக்காட்டவிரும்புகின்றேன் எனஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.
இந்த பின்னணியில் உடல்களை தகனம் செய்வது சமூக ஒத்திசைவின் மீது எதிர்மறையான தாக்கத்தை செலுத்துகின்றது மேலும் நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் அல்லது நோயாளிகளுடன் தொடர்பிலிருந்தவர்கள் மருத்துவ கிசிச்சை பெற தயங்கும் நிலையை இது ஏற்படுத்தி கொரோனா வைரசினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


பாரிய தொற்றுநோய் சூழ்நிலையின் போது பொதுசுகாதார காரணங்களிற்காக அரசாங்கம் மக்கள் மத்தியில் வரவேற்பில்லாத நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய நிலை காணப்படுகின்றதுஎனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த விவகாரத்தில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவரின் உடலை புதைப்பதற்கு அனுமதி மறுப்பதால் ஏற்படக்கூடிய எதிர்மறையான விளைவுகள் எந்தவொரு சாத்தியமான நடவடிக்கைகளினால் ஏற்படக்கூடிய நன்மையையும் விட அதிகமாக காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆதாரங்களை அடிப்படையாக கொண்ட வழிகாட்டுதல்களையும்,அனைத்து சமூகங்களினதும் உரிமைகளையும் உறுதி செய்வதாக மதிப்பதாக இலங்கை வழங்கியுள்ள வாக்குறுதிகளையும் கருத்தில் கொள்ளும்போது தற்போதைய கொள்கையை மறுஆய்விற்கு உட்படுத்தி கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை பாதுகாப்பான கௌரவமான முறையில் புதைப்பதற்கு அனுமதிக்கப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பை வெளியிடுகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.