கெசாரோனாத் தொற்றுப் பரவல் தொடர்பில் அரசாங்கம் அலட்சியமாக இருந்துவிட்டு மக்களை குறை சொல்லக்கூடாது. அத்துடன் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களை உருவாக்குவதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2021ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
அரசாங்கம் கடந்த ஏப்ரல் மாதத்துடன் கொரோனா தாக்கம் முடிவடைந்து விட்டதாக கூறியது. ஆனால், அதன் பின்னர் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பில் வைத்தியர்கள் தொடர்ந்து எச்சரித்து வந்தனர். ஆனால் அரசாங்கம் கொரோனா தொடர்பில் அலட்சியமாக இருந்துவிட்டு, தற்போது மக்கள் மீது குறைகூறுகின்றனது. முதல் அலையின் வெற்றியை கொண்டாடியவர்கள் இரண்டாம் அலையை பொறுப்பேற்க மறுக்கின்றனர்.
அத்துடன் கொரோனா ஏற்பட்ட ஆரம்பத்தில் பல நாடுகள் அது தொடர்பான சட்டங்களை கடந்த ஏப்ரல் மாதத்திலே உருவாக்கின. ஆனால் எமது நாட்டில் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில்தான் கொரோனா தடுப்புக்கான சட்டங்கள் உருவாக்கப்பட்டன.
அதனால் கொரோனா பரவலுக்கு அரசாங்கம் மக்களை திட்டக்கூடாது. அரசாங்கம் பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும்.
ஆனால் மக்களையும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதையும் அரசாங்கம் கைவிட்டுவிட்டுள்ளது. மக்களை பாதுகாக்கவே நாம் நாடாளுமன்றத்திற்கு வருவதுடன், பதவிகளையும் பெற்றுக்கொள்கிறோம். அதன் பிரகாரம் செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.