நீதிமன்றங்களைத் தேடி ஓடாதீர்கள் – இது யுத்தங்களில் வீழ்ந்த நாயகர்களை அஞ்சலிக்கும் காலம்! ஸ்ரீலங்கா அரசிடம் கோரிக்கை

  யுத்தத்தில் போராடி மடிந்தவர்களை அஞ்சலிக்கும் சட்டரீதியான உரிமையைத் தடுக்க வேண்டாமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

  இன்றையதினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இதனை எடுத்துரைத்தார். இதன் போது பேசிய அவர்,

  எமது நாடு துரதிஷ்ட வசமாக மூன்று தசாப்த கால யுத்தத்தைக் கடக்க வேண்டியதாக இருந்தது.

  வடக்கிலும் கிழக்கிலும் கூட அரசுக்கு எதிராகப் போராடி வீழ்ந்த உறவுகளின் தாய்மார்கள், சகோதரிகள், சகோதரர்கள், தந்தைமார், பிள்ளைகள் பலர் இருக்கின்றார்கள்.

  அவர்களின் மறைவை நினைவுகூரும் மாதம் தான் இது. யுத்தங்களில் வீழ்ந்த நாயகர்களை உலகம் முழுவதும் உள்ள மக்கள் நினைவு கூருகின்றார்கள்.

  ஜே.வி.பியின் ஸ்தாபகர் றோஹண விஜவீரவை நினைவு கூரவும் கெளரவிக்கவும் இங்கு அனுமதிக்கப்படுகின்றது. துரதிஷ்டவசமாக உயிரிழந்தவர்களை நினைவு கூரக் கூட இங்கு பாகுபாடு – பாராபட்சம் – காட்டப்படுகின்றது.

  தமிழர்கள் ஒதுக்கப்படுகின்றார்கள். எங்கள் பெற்றோர்கள் தமது உறவுகளை நினைவு கூர அனுமதிக்கப்படுகின்றார்கள் இல்லை.

  நான் இந்த ஒத்திவைப்பு வேளைப்பிரேரணையில் இது குறித்துப் பேசுவதற்கு காரணம் உண்டு. தங்கள் அன்புக்குரிய உறவுகள் புதைக்கப்பட்ட மயானங்களுக்கு, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, நினைவு கூர்வதற்கு நீண்ட பல வருடங்களைச் சென்றுவருவது போல நவம்பர் மாதத்தில் அவர்கள் செல்லும் போது அவர்களைத் தடுப்பதற்கு கொவிட் 19 பிரச்சினையைத்தான் அதிகாரிகள் பயன்படுத்துகின்றனர்.

  அந்த நாள்கள் மிக விரைவில் வருகின்றன. அத்தகைய நிலையில் பொலிஸாரும் மற்றைய அதிகாரிகளும் நீதிமன்றங்களைத் தேடி ஓடுவார்கள். 106 பிரிவின் கீழ் (தடை விதிக்கும்) உத்தரவைக் கோருவார்கள்.

  அது பொது மக்களுக்கு தொல்லை கொடுப்பது பற்றியது. அது இங்கு பொருந்தாது. இது பொதுமக்களுக்குத் தொல்லை ஏற்படுத்தும் விடயமே அல்ல. இது வீதிகளில் நடப்பது அல்ல. தள்ளி மயானத்தில் நடப்பது.

  ஆகவே, இது விடயத்தில் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளுமாறு அரசை வேண்டுகிறேன்.

  யுத்தத்தில் போராடி மடிந்தவர்களை நினைவு கூர்ந்து, அஞ்சலிப்பதற்கு அவர்களின் பெற்றோருக்கும் குடும்பத்தவர்களுக்கும் ஏனையோரும் உள்ள சட்டரீதியான உரிமையைத் தடுக்க “கொவிட்- 19′ விடயத்தையோ வேறு விவகரங்களையோ பயன்படுத்த வேண்டாம் என அரசைக் கோருகிறேன்” என்றார்.