அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் தோல்வியடைந்துள்ளதை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஏற்றுக்கொள்ள மறுப்பதை அயர்லாந்தின் முன்னாள் ஜனாதிபதியும் மனிதஉரிமைகளிற்கான முன்னாள் ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகருமான மேரி ரொபின்சன் இலங்கையுடன் ஒப்பிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
“இலங்கை சிம்பாப்வே கென்யா போன்ற நாடுகளில் காணப்படும் ஜனநாயகமற்ற பதற்றமான நிலைமைகளை நினைவுபடுத்தியுள்ளது” என மேரி ரொபின்சன் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக ரீதியில் டிரம்ப் அதிகாரத்தை கையளிக்க மறுப்பது குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக மேரி ரொபின்சன் தெரிவித்துள்ளார்.
உலகின் பிரபலமான நன்கு மதிக்கப்படும் மூத்த தலைவர்களின் அமைப்பான எல்டர்ஸ் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
டிரம்பும் குடியரசுக்கட்சியும் அமெரிக்காவின் ஜனநாயக நடைமுறைகளுக்கான சிறிதளவு மதிப்பை கூட வெளியிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களின் இந்த நடவடிக்கை அமெரிக்க எல்லையை தாண்டி பிரதிபலிக்க கூடும், இலங்கை சிம்பாப்வே கென்யா போன்ற நாடுகளின் ஜனநாயகமற்ற பதற்றமான நிலை குறிதது எங்கள் அமைப்பு கடந்தகாலங்களில் தெரிவித்தது போன்று அமெரிக்காவின் ஜனநாயக நடைமுறை குறித்தும் கருத்து தெரிவிக்கவேண்டியிருப்பது அதிர்ச்சியளிக்கின்றது என மேரி ரொபின்சன் தெரிவித்துள்ளார்.
அமைதியான முறையில் ஆட்சிமாற்றத்தை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி டிரம்ப் மறுப்பது ஜனநாயக விழுமியஙகளை பலவீனப்படுத்துகின்றது.
டிரம்பின் சக குடியரசுக்கட்சியினர் தற்போது அமெரிக்க அரசமைப்பு ஜனநாயகஸ்தாபனங்கள் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் மீதான தங்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும்.
இதன்மூலம் நாடு நல்லிணக்க நடைமுறைகளை நோக்கி நகரலாம் என எல்டர்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
வலுவான ஆதாரங்கள் இன்றி குடியரசுக்கட்சி தேர்தல் மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைப்பது அமெரிக்காவின் தேர்தல் நடைமுறைகளை அவர்கள் மதிக்காததை வெளிப்படுத்துகின்றது என மேரி ரொபின்சன் தெரிவித்துள்ளார்.
தற்போது காணப்படுகின்ற முன்னர் ஒருபோதும் இல்லாத நிலை அமெரிக்காவின் எல்லைகளை தாண்டி எதிரொலிக்க கூடும்,சர்வதேச அளவில் ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் அலட்சியம் செய்ய முயலும் சர்வாதிகாரிகள் மற்றும் ஏனையவர்களுக்கு இது சாதகமாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.