ஹைப்பர்லூப்பில் முதல்முறையாக மனிதர்கள் பயணம்!

விமானத்தைவிட அதிவேகமான, ஆனால், மெட்ரோ ரயில் போன்ற பயண அனுபவத்தைத் தரும் ஹைப்பர்லூப்பில் முதல்முறையாக மனிதர்களை பயணிக்கச் செய்து வெற்றிகரமாக சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

லாஸ் வேகாஸில் உள்ள விர்ஜின் ஹைர்லூப் நிறுவனத்தின் டெவ்லூப் சோதனைத் தளத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான கிகெல் மற்றும் பயணிகள் அனுபவ இயக்குநர் சாரா லுச்சியன் ஆகியோர் ஹைப்பர்லூப்பில் பயணித்தனர். பயணம் மிகவும் நன்றாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த சோதனையில் எக்ஸ்பி -2 வாகனம் பயன்படுத்தப்பட்டது. இது பிக்-பியார்கே இங்கெல்ஸ் குழுமம் மற்றும் கிலோ டிசைன் நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டது.

வெற்றிடக் குழாய் வழியில் மின்காந்த சக்தியில் இயங்கக்கூடிய ஹைப்பர்லூப் மூலம் மணிக்கு 1,080 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும்.

தற்போது முன்மாதிரியாக வடிவமைக்கப்பட்ட சோதனை ஹைப்பர்லூப்பில் இருவர் மட்டுமே அமர முடியும். ஆனால், எதிர்காலத்தில் வணிகரீதியில் வடிவமைக்கப்படவுள்ள ஹைப்பர்லூப்பில் 28 பேர் செல்ல முடியும்.

இது வருங்காலத்தில் நடைமுறைக்கு வரும்பட்சத்தில் போக்குவரத்தை மிகவும் எளிதாக்கும் என்றும் கூறப்படுகிறது.