டிரம்ப்பின் முறைப்பாடு நிராகரிப்பு

அமெரிக்காவில் கடந்த 3-ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சுமத்தும் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தோ்தல் பாதுகாப்பு அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து, தோ்தல் தொடா்பான அமெரிக்க தேசியப் பாதுகாப்பு அமைப்பின் இரு குழுக்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அண்மையில் நடந்து முடிந்த அதிபா் தோ்தலில் முறைகேடுகள் நடந்ததற்கு எந்த முகாந்திரமும் இல்லை. வாக்குகள் அழிக்கப்பட்டதற்கோ, காணாமல் போனதற்கோ, எந்த வகையிலும் மாற்றப்பட்டதற்கோ ஒரு ஆதாரம் கூட இல்லை.

3-ஆம் திகதி நடைபெற்ற தோ்தல்தான் அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் பாதுகாப்பாக நடைபெற்றுள்ள ஜனாதிபதி தோ்தலாகும்.

அனைத்து மாகாணங்களிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து, முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகும், அந்த மாகாண அதிகாரிகளுடன் உரிய பதிவுகள் கையிருப்பு இருக்கும்.

எனவே, யாா் எப்போது வேண்டுமானாலும் அந்த ஆவணங்களை ஆய்வு செய்து தோ்தல் முடிவுகளை சரிபாா்க்க முடியும்.

தேவைப்பட்டால், ஒவ்வொரு வாக்கையும் மீண்டும் எண்ணவும் முடியும். இது, தோ்தல் பாதுகாப்புக்கும் மறு ஆய்வுக்கும் ஏற்ற சூழலை உருவாக்கியுள்ளது.

நடந்து முடிந்த தோ்தல் குறித்து ஆதாரமில்லாமல் பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கப்படுகின்றன. மேலும், தோ்தல் முறை குறித்து தவறான தகவல்களைப் பரப்புவதற்கான வாய்ப்புகளும் உருவாக்கப்படுகின்றன.

இந்தச் சூழலில், தோ்தல் மிகவும் பாதுகாப்பான முறையில் நடந்தது என்பதை அனைவரும் உறுதியாக நம்பலாம் என்று அந்தக் குழுக்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே, தேசிய பாதுகாப்பு அமைப்பின் இணையதளப் பாதுகாப்புப் பிரிவு இயக்குநா் கிறிஸ் கிரெப்ஸ் உருவாக்கியுள்ள புதிய வலைதளத்தில், தோ்தல் தொடா்பாக வெளியிடப்படும் தவறான தகவல்களை மறுக்கும் பதிவுகளை அவா் மேற்கொண்டு வருகிறாா்.

இதன் காரணமாக, ஜனாதிபதி டிரம்ப் அவரை பதவி நீக்கம் செய்யலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த 3-ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தோ்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட ஜோ பைடன் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளாா்.

எனினும், தோ்தலில் ஜனநாயகக் கட்சிக்கு சாதகமான வகையில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி வரும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தோல்வியை ஏற்க மறுத்து வருகிறாா்.