பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்!

பாடசாலைகளில் மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளைகளை எதிர்வரும் திங்கட்கிழமை திறப்பதா, இல்லையா என்பது குறித்து சுகாதார தரப்பினருடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பிரீஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்.

ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைபரிசில் பரீட்சை பெறுபேறு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் பரீட்சை பாதுகாப்பான முறையில் நடத்தப்பட்டது. இவ்வாறான நிலையிலும் பரீட்சை பெறுபேறு 33 நாட்களுக்குள் வெளியிடப்பட்டுள்ளன.

பெறுபேற்றை விரைவாக வெளியிட பரீட்சை திணைக்களம் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கின்றோம். 200 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ள 10 மாணவர்களுக்கு அரசாங்கம் வாழ்த்துகிறது.

கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் உயர்தர பரீட்சையும் நடத்தப்பட்டது. அதன் பெறுபேறுகளும் விரைவில் வெளியிடப்படும். பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் மாணவர்களை விரைவாக இணைத்துக் கொள்ள புதிய திட்டம் செயற்படுத்தப்படுகிறது.

2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த.சாதாரண தர பரீட்சை அடுத்த வருடம் 2021ஆம் அண்டு ஜனவரி மாதம் 18ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளை திறப்பது தற்போது பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. மூன்றாம் தவணை பாடசாலை கற்றல் நடவடிக்கை இம்மாதம் 9ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 9ஆம் திகதி பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியாத காரணத்தினால் பாடசாலைகளை திறக்கும் திகதி எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை வரை பிற்போடப்பட்டது.

எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலையினை திறப்பது தொடர்பில் சுகாதார தரப்பினருடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளது. மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு மற்றும் மாணவர்களின் எதிர்காலம் ஆகியவற்றை கருத்திற் கொண்டு அரசாங்கம் உரிய தீர்மானத்தை எடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.