சென்னையை வெற்றிகொண்டு 2 ஆம் இடத்தை உறுதி செய்தது ராஜஸ்தான் றோயல்ஸ்

சென்னை சுப்பர் கிங்ஸுக்கு எதிராக மும்பை ப்றேபோர்ன் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 2 பந்துகள் மீதமிருக்க 5 விக்கெட்களால் வெற்றியீட்டிய ராஜஸ்தான் றோயல்ஸ், புள்ளிகள் நிலையில் 2ஆம் இடத்தை உறுதி செய்து ப்ளே ஒவ் சுற்றில் விளையாட தகதிபெற்றது.

151 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் 19.4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 151 ஓட்டங்ளைப் பெற்று வெற்றியீட்டியது.

சென்னை சுப்பர் கிங்ஸ் சார்பாக மொயீன் அலி துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்தியபோதிலும் அந்த திறமையை யஷஸ்வி ஜய்ஸ்வாலின் அரைச் சதமும் ரவிச்சந்திரன் அஷ்வினின் சிறந்த துடுப்பாட்டமும் வீன்போகச் செய்தன.

ராஜஸ்தான் றோயல்ஸ் தனது அதிசிறந்த துடுப்பாட்ட வீரர் ஜொஸ் பட்லரை (2) இரண்டாவது ஓவரில் இழந்தது. எனினும் ஜய்வால், அணித் தலைவர் சஞ்சு செம்சன் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு வலு சேர்த்தனர்.

தேவ்தத் படிக்கல் (3), சஞ்சு செம்சன் (59), ஷிம்ரன் ஹெட்மியர் (6) ஆகியோர் 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழக்க ராஜஸ்தான் றோயல்ஸ் சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது. (112 – 5 விக்.)

எவ்வாறாயினும் ரவிச்சந்திரன் அஷ்வின், ரியான் பராக் ஆகிய இருவரும் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

பந்துவீச்சில் ப்ரஷாந்த் சோலன்கி 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். மதீஷ பத்திரண 3.4 ஓவர்களைக் கட்டுப்பாட்டுடன் வீசி 28 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்தார்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த சென்னை சுப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது.

ரத்துராஜ் கயேக்வாட் (2) முதலாவது ஓவரிலேயே ஆட்டமிழந்த போதிலும் டெவன் கொனவேயும் மொயீன் அலியும் 2ஆவது விக்கெட்டில் 83 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

கொன்வே 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்த நாராயன் ஜெகதீசன் (1), அம்பாட்டி ராயுடு (3) ஆகியோர் சீரான இடைவெளிகளில் களம் விட்டகன்றனர். (95 – 4 விக்.)

மொயீன் அலியும் எம்.எஸ். தோனியும் 6ஆவது விக்கெட்டில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் தோனி 26 ஓட்டங்களுடன் வெளியேறினார். அடுத்த பந்தில் மொயீன் அலியும் ஆட்டமிழந்தார்.

திறமையாகத் துடுப்பெடுத்தாடிய மொயீன் அலி 57 பந்துகளில் 13 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 93 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ஒபெட் மெக்கோய் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் யுஸ்வேந்த்ர சஹால் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்ற்றினர்.

அணித் தலைமையை தோனி தொடர்வார்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணித் தலைவராக அடுத்த வருட ஐ.பி.எல். போட்டிகளிலும எம். எஸ. தோனி பதவி வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரவீந்த்ர ஜடேஜாவும் சென்னை சுப்பர் கிஙஸ் அணியில் தொடர்ந்து விளையாடவுள்ளார்.