நாட்டைவிட்டு வெளியேறிய கோட்டாபய! கடும் ஆத்திரமடைந்துள்ள போராட்டக்காரர்கள்

ராஜபக்சர்கள் அனைவரையும் சிறையில் அடைக்க வேண்டும் என காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களின் எதிர்ப்பினால் பதவி விலகுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்திருந்த நிலையில் இன்று அதிகாலை அவரது மனைவியுடன் மாலைதீவுக்கு தப்பிச் சென்றார்.

இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தின் மீது கொழும்பு காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கடும் கோபத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.

நாங்கள் இதனை விரும்பவில்லை, கோட்டாபயவை நாட்டிலேயே வைத்திருக்க நாங்கள் விரும்புகின்றோம். அவர்களை திறந்த வெளிச் சிறையில் அடைக்க விரும்புகின்றோம், அவர்கள் அங்கே விவசாய நடவடிக்கையில் ஈடுபட முடியும், கொள்ளையிடப்பட்ட எங்களுடைய பணம் எங்களுக்கு மீண்டும் வேண்டும் என காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், மாலைதீவில் இருந்து அண்மையில் இலங்கைக்கு வந்த இளைஞர் ஒருவர் குறிப்பிடுகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலைதீவிற்கு தப்பிச் சென்றது மிகவும் மோசமான விடயம் என்றும், இங்கு போலவே அங்கும் ஊழல்கள் நிறைந்துள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.