ஜனாதிபதி தெரிவில் ரணிலை ஆதரிக்க பொதுஜன பெரமுன தீர்மானிக்கவில்லை – அலிசப்ரி

ஜனாதிபதி தெரிவின்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த தீர்மானமும் எடுக்கவில்லை.

19ஆம் திகதியே அதுதொடர்பில் கலந்துரையாட இருக்கின்றோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நீதி அமைச்சருமான அலிசப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்ற அமர்வு நிறைவடைந்த பின்னர் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பிலான வேட்புமனு எதிர்வரும் 19ஆம் திகதியே இடம்பெற இருக்கின்றது. வேட்புமனு செலுத்திய பின்னர் அதுதொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுப்போம்.

என்றாலும் ஜனாதிபதி தெரிவில் எந்த வேட்பாளலை தெரிவுசெய்வது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இதுவரை எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்றே நினைக்கின்றேன்.

அத்துடன் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தெரிவுசெய்ய தீர்மானித்திருப்பதாக கட்சியின் செயலாளர் தெரிவித்தமை தொடர்பில் எனக்கு தெரியாது.

கட்சிக்குள் இருப்பவர்களுக்கு தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கலாம். என்றாலும் கட்சியாக இதுவரை அவ்வாறானதொரு தீர்மானம் எடுத்திருப்பது குறித்து எனக்கு தெரியாது. 19ஆம் திகதியே இதுதொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கும் என நினைக்கின்றேன் என்றார்.