கோட்டா, மஹிந்தவுக்கு கனடா தடைகளை விதிக்க வேண்டும் – ஹரி ஆனந்த சங்கரி கோரிக்கை

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கனடிய அரசு தடைகளை விதிக்க வேண்டும் என்று அந்நாட்டின் ஆளும் லிபரல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் சமகால அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் ஒட்டாவாவில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை மிகக் கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. இதற்கு அங்கு ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் பின்பற்றிவந்திருந்த தவறான கொள்கைகளே காரணமாக உள்ளன.

குறிப்பாக, போர் முடிவடைந்து 13ஆண்டுகளாகின்றபோதும், பாதிக்கப்பட்டதரப் பினரை மேம்படுத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கப்படவில்லை. அதேநேரம், அந்தப்போரில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பொறுப்புக்கூறப்படவில்லை.

குறிப்பாக, 2008, 2009ஆம் ஆண்டுகாலப்பகுதியில் இலங்கையின் தமிழர்களின் தாயகப்பகுதிகளில் நடத்தப்பட்ட கொடூரங்களுக்கு இன்னமும் பொறுப்புக்கூறப்படவில்லை. இதற்கு பொறுப்புக்கூறவேண்டிய தலைவர்களின் பிரதான நபர்களாக இருப்பவர்கள் கோட்டாபய ராஜபக்ஷவும், மஹிந்தராஜபக்ஷவுமே ஆவர்.

இவ்வாறான நிலையில் மக்கள் புரட்சியின் காரணமாக கோட்டாபய ராஜபக்ஷ தற்போது இலங்கையில் இருந்துவெளியேறி சிங்கப்பூரில் தங்கியிருக்கின்றார். அங்கிருந்து தான் அவர் தனது இராஜினாமாவைச் செய்துமுள்ளார்.

அதேபோன்று பிரதமராக இருந்த அவருடைய சகோதரர் மஹிந்த ராஜபக்ஷவும் இப்போது பதவியில் இருந்து விலகியுள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தில் கோட்டாபயவும், மஹிந்தவும் தமக்கு காணப்பட்ட குற்றவியல் வழக்கு விலக்கீட்டு சிறப்புரிமைகளை இழந்துள்ளனர்.

ஆகவே, அவர்கள் மீது பொறுப்புக்கூறலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். குறிப்பாக, சர்வதேச தரப்புக்கள் இந்த விடயத்தில் தீவிரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

கடந்தகாலத்தில், சர்வதேச தரப்புக்கள் அவர்களை சுதந்திரமாக நடமாடுவதற்கு அளித்த வெளியை கைவிட்டு, உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அனைத்து அரசாங்கங்களிடத்திலும் கோருகின்றேன்.

அத்துடன், கனடிய அரசாங்கம் கோட்டாபய, மஹிந்த ஆகிய இருவரும் நாட்டுக்குள் பிரவேசிப்பது உட்பட அனைத்துவிதமான தடைகளையும் அவர்களுக்கு எதிராக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என்றார்.