ரணிலுக்கு சிரேஷ்ட ஆலோசகர்களாக இருவர் நியமனம்

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்களாக பேராசிரியர் சுனந்த மத்தும பண்டார மற்றும் திருமதி ஷேனுகா செனவிரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக (ஊடகங்கள்) பேராசிரியர் மத்தும பண்டாரவும், சர்வதேச ஊடகங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக திருமதி செனவிரத்னவும் அண்மையில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றனர்.

களனிப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் சுனந்த மத்தும பண்டார, களனிப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் தலைவர் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.
அவர் ஊடகத்துறை அமைச்சின் செயலாளராகவும், தகவல் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சகத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் இருந்துள்ளார்.

திருமதி செனவிரத்ன இலங்கை வெளிவிவகார சேவையின் சிரேஷ்ட முன்னாள் இராஜதந்திரி மற்றும் வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆவார். இவர் இங்கிலாந்திற்கான உயர் ஸ்தானிகராகவும், தாய்லாந்துக்கான தூதுவராகவும், ஜெனீவா மற்றும் நியூயோர்க்கிலும் ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தரப் பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளார்.