அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதலை நடத்த முழுஅளவில் தயார் ; வடகொரியாவின் அதிரடி அறிவிப்பு-!

ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியாவின் தலைவராக கிம் ஜாங் அன் கடந்த 2011ம் ஆண்டு பதவியேற்றது முதல் தொடர்ச்சியாக சக்தி வாய்ந்த ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை அந்நாடு சோதித்து வந்தது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி இந்த சோதனைகளை நடத்தியதால் வடகொரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன.

இந்நிலையில், அந்த நாடு கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணையை சோதித்து அண்டை நாடுகளையும், அமெரிக்காவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 4 ஆண்டுகளுக்கு பிறகு இதுபோன்ற சோதனையை வடகொரியா நடத்தி உள்ளது.

இந்த சூழலில், கொரிய போரின் 69வது ஆண்டு தின நிகழ்வை நினைவுகூரும் வகையில் நடந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, அமெரிக்காவுடனான மோதல் போக்கு அணு ஆயுத ஆபத்துகளை உருவாக்கி விட்டது. சுய பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை வடகொரியா எடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு விட்டது.

எந்த நெருக்கடியையும் எதிர்கொள்ள எங்களுடைய ஆயுத படைகள் முழு அளவில் தயாராக உள்ளன. இதேபோன்று, எங்கள் மீது நடத்தப்படும் அணு ஆயுத போரை தடுக்கும் வகையில், நாங்கள் நம்பிக்கையுடன், துல்லியமுடன் மற்றும் சரியான முறையில் பதிலடி கொடுக்க முழு அளவில் தயாராக இருக்கிறோம் என கூறியுள்ளார்.

அமெரிக்காவுடனான எந்த ஒரு ராணுவ மோதலையும் எதிர்கொள்ள, வடகொரியா முழுஅளவில் தயாராக இருக்கிறது என நான் மீண்டும் தெளிவுப்படுத்தி கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். போர் நடந்து 70 ஆண்டுகள் கழித்தும், தென்கொரியாவுடன் சேர்ந்து கொண்டு, வடகொரியாவுக்கு எதிராக ஆபத்து நிறைந்த, சட்டவிரோத பகைமை விளைவிக்கும் செயல்களில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. தனது செயல்களுக்கு ஆதரவு சேர்க்கும் வகையில் வடகொரியாவை அச்சுறுத்த முயற்சிக்கிறது என அவர் கூறியுள்ளார்.

ராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படுகிறது என வடகொரியா நீண்டகாலம் ஆகவே தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. இதனாலேயே, தனது நாடு மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் நீக்கத்திற்கு ஏதுவாக, அதற்கு மாற்றாக அணு ஆயுத திட்டங்களை நிறுத்துவது பற்றிய பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிக்கான நம்பிக்கைகளை அது குலைக்கிறது என அந்நாடு கூறி வருகிறது.