இராணுவம் தவறாக எதனையும் செய்யவில்லை என்பதில் உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் சர்வதேச விசாரணை ஒன்றை நீங்கள் ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது? எதற்காக நீங்கள் அஞ்சுகின்றீர்கள்? அப்படி அதுவும் இடம்பெறவில்லை என்பதை நிரூபியுங்கள்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ். மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகரவிடம் எழுப்பிய கேள்வியையடுத்து இன்று காலை இரு தரப்பினருக்கும் இடையில் கடுமையான சொற்போர் இடம்பெற்றது.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் சரத் வீரசேகர, “பரணகம ஆணைக்குழுவில் உலகப் பிரசித்தி பெற்ற ஆறு போர்க் குற்றவியல் நிபுணர்கள் இடம்பெற்றிருந்தார்கள். போர்க் குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பதை அவர்கள் கூறியிருந்தார்கள். அதற்குப் பின்னரும் எதற்காக இதனைக் கேட்கின்றீர்கள்? இந்த மக்கள் துன்பப்பட்ட போது நீங்கள் எங்கே நின்றீர்கள்? நீங்கள் ஒருபோதுமே போர்க் களத்தில் இருக்கவில்லை” எனத் தெரிவித்த போது கஜேந்திரகுமார் குறிக்கிட்டார்.
“போரின் இதிக்காலத்தில் நான் இங்குதான் நின்றேன். உங்களுடைய பிரதமருடைய சகோதரர் பஸில் ராஜபக்ஷவுடன் தொடர்பில் இருந்தேன். உங்களால் இறுதியாகக் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுடைய உயிர்களைப் பாதுகாப்பதற்காக அவருடன் தொடர்புகொண்டிருந்தேன். தமிழ் மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்காக பஸில் ராஜபக்ஷவுடன் பேசிக்கொண்டிருந்தேன்” என கஜேந்திரகுமார் தெரிவித்தார்.
இதன்போது இரு தரப்பினருக்கும் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றது.