கோட்டாபய ராஜபக்சவின் தோல்விக்கான காரணத்தை வெளியிட்டுள்ள கரு ஜயசூரிய

கோட்டாபய ராஜபக்ச நிபுணர்களின் கருத்துக்களுக்கு செவிசாய்க்காமை காரணமாகவே தோல்வியடைந்ததாக சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்க தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“இந்தநிலையில் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதற்கு தொடர்புடைய துறைகளில் அனுபவமுள்ள சுமார் 2500 கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்களை அடையாளம் கண்டுள்ளதாக தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒவ்வொரு செயல்முறைகள் குறித்தும் உலகெங்கிலும் உள்ள புத்திஜீவிகளின் கருத்துகளை தங்கள் இயக்கம் கோரியதாகவும், இதற்காக சுமார் 98 சூம் விவாதங்களை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், அரசியலமைப்பு, தேர்தல் முறை போன்ற பல்வேறு துறைகளை மையமாகக் கொண்ட மதிப்புமிக்க வெளியீடுகளை வெளியிட்டப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்சவிடம் பெரும் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டது, ஆனால் அவர் நிபுணர்களின் கருத்தை கவனிக்காததால் தோல்வியடைந்தார்.

நாடு அதன் வரலாற்றில் மிகவும் இருண்ட மற்றும் துரதிர்ஷ்டவசமான காலகட்டங்களில் ஒன்றை எதிர்கொண்டுள்ள இவ்வேளையில், தாய்நாட்டைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் ஒவ்வொரு இலங்கைப் பிரஜைக்கும் கணிசமான பங்கு உள்ளது.

இலங்கையின் வர்த்தகத்தை பிரதிநிதித்துவம் செய்பவர்கள். தொழிற்சங்க இயக்கங்களுக்கு பெரிய பொறுப்பு உள்ளது.

இந்தநிலையில், ஆட்சியாளர்கள், தமது முதல் பணியாக 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குவதுடன் பால்மா, எரிவாயு மற்றும் உணவுப் பொருட்கள் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இதன் மூலம் தொழில் வளர்ச்சி, ஏற்றுமதி மற்றும் சுற்றுலா, போக்குவரத்து சேவைகளும் சீரமைக்கப்படும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வித்துறையின் செயல்பாடுகள் சீர்குலைந்துள்ளன.எனவே அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கல்வியானது, மிக மதிப்புமிக்க வளமாகவும் முதலீடாகவும் இருப்பதால் அதன் செயல்பாட்டை மீட்டெடுக்க வேண்டும்.

தலைவர்களின் தவறான முடிவுகளால் கிட்டத்தட்ட அழிந்துள்ள விவசாயத் துறையும் மீண்டும் புத்துயிர் பெற வேண்டும்.

அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தின் மூலம் நாடாளுமன்றம் பலப்படுத்தப்படும். அத்துடன் உலகின் வளர்ந்த ஜனநாயக நாடுகளில் வெற்றிகரமாக நடத்தப்படும் மேற்பார்வைக் குழுக்களை மீண்டும் அமைப்பதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுச் சேவையில் பொறுப்புடன் பங்கேற்க முடியும்.

இதேவேளை சமூக நீதிக்கான தேசிய இயக்கம் முன்வைத்த முன்மொழிவை அரசாங்கம் ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, நாட்டின் நிபுணத்துவ அறிஞர்களின் கருத்துக்களையும், தமது அமைப்பின் அனுபவங்களையும் பயன்படுத்தி இந்த முன்மொழிவுகள் வகுக்கப்பட்டுள்ளன.”என தெரிவித்துள்ளார்.