தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்த மலேசிய நீதிமன்றம்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு ஒன்றை மலேசிய பிராந்திய நீதிமன்றம் தள்ளுப்படி செய்துள்ளது.

இது தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றிருந்த நிலையில் குறித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்ற மனு தாக்கலை விசாரணை செய்ய வேண்டும் என்று கோரி மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு வாடகை வாகன சாரதி ஒருவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனுவையே மலேசிய பிராந்திய நீதிமன்றம் ஒன்று இன்று(29.09.2022) தள்ளுப்படி செய்துள்ளது.

விவாதங்களை அடுத்து பொதுநலன் தொடர்பான விடயம் என்ற அடிப்படையில் மூன்று நீதிபதிகளை கொண்ட நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது

மனு தொடர்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், நீதிமன்றத்தின் சட்ட வரம்புகளை பூர்த்தி செய்யவில்லை என்று நீதிபதிகள் தமது நிராகரிப்புக்கு காரணம் காட்டியுள்ளனர்.

பணமோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நிதி வருவாய் தொடர்பான சட்டத்தின்கீழ் உள்துறை அமைச்சரின் அதிகார வரம்பு தொடர்பில் மனுதாரர் சட்டத்தரணிகள், கேள்வி எழுப்பியுள்ளனர்.

முன்னதாக தமிழீழ விடுதலைப்புலிகளை, பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்குவதற்கான மனுவினை மீள்பரிசீலனைக்காக, 2020 ஆண்டு பெப்ரவரி 6 ஆம் திகதியன்று மனுத்தாரர் பாலமுருகன், நீதிமன்ற ஆணையை பெற்றுள்ளார்.

எனினும் 2020, செப்டெம்பர் 7ஆம் திகதியன்று மேல் நீதிமன்றம் இந்த மனுவை நிராகரித்துள்ளது.

இதனையடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டபோதும், அதிலும் மனுவானது நிராகரிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்த மலேசிய நீதிமன்றம் | Malaysian Court Dismisses Ltte Case

இந்தநிலையில் கடந்த 20ஆம் திகதியன்று தமது மேன்முறையீட்டை தொடரக்கோரி மனுத்தாரர் பிராந்திய நீதிமன்றில் தமது மனுவை தாக்கல் செய்துள்ளார்.

தமது மனுவில் மலேசியாவின் உள்துறை அமைச்சர் உட்பட்டவர்களை பிரதிவாதிகளாக குறிப்பிட்ட மனுதாரர், வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பான தகவல்கள் செல்லாது என்றும், இது கூட்டாட்சி அரசியலமைப்புக்கு முரணானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே 2019 இல் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித்ததாக கூறப்பட்ட மலேசியாவின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 12 பேரில் பாலமுருகனும் அடங்கியிருந்தார்.

எனினும் 2020 இல் பாலமுருகன் உட்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை மலேசிய நாட்டின் அப்போதைய சட்டமா அதிபர் விலக்கிக்கொண்டார்.