ரணில் அரசாங்கத்தின் ஆயுட்காலம் மைத்திரி தெரியாது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை  பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கு நடத்தப்பட்ட மக்கள் போராட்டத்தை விடவும், இனிவரப்போகும் மக்கள் போராட்டம் பலம் வாய்ந்ததாக இருக்கும்.

இவ்வாறான நிலையில், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் ஆயுட்காலம் கடவுளுக்கே தெரியும் என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாட்டில் தற்போது நிலவும் பட்டினி வீதத்தை குறைப்பதற்கு நாட்டின் உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கான வினைத்திறன்மிக்க வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டுமெனவும் அவர்  வலியுத்தியிருந்தார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதுதே அவர் ‍ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

” எமது நாடு அரிசியை ஏற்றுமதி செய்து வந்த நாடு ஆகும்.  வரலாற்றில் எமது நாடு பல்வேறு குழப்பமான சூழ்நிலைகள் நிலவிய காலத்திலும்கூட அரிசிக்கு தட்டுப்பாடு இருந்ததில்லை.

விவசாயம் செய்து, முழு நாட்டுக்கும் உண்ண சோறு போட்ட  விவசாயிக்கும், அவனது குடும்பத்திற்கும் கூட சோறு இல்லாத அவல நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தவறான கொள்ளைகள் காரணமாக நாடு இன்று உணவுத் தட்டுப்பாடு, பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் பட்டினி வீதத்தை குறைப்பதற்கு நாட்டின் உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கான வினைத்திறன்மிக்க வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்.  அரச நிறுவனங்களில் இதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

உணவு  பற்றாக்குறையால், பாடசாலை மாணவர்கள் மயங்கி விழுகின்றனர். போஷாக்கான உணவு அவர்களுக்கு கிடைப்பதில்லை. அவர்களுக்கு போஷாக்கான உணவை கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நாட்டு மக்கள் நாளொன்று ஒருவேளை உணவை மாத்திரம் உட்கொள்ளும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையை மாற்றி அமைக்கப்பட வேண்டியது அவசியம்.

பணம் படைத்தவர்களுக்கு நாட்டில் பட்டினி வீதம் அதிகரிப்பது குறித்து பிரச்சினை இல்லை. ஆனாலும், சாதாரண மக்களுக்கு இது மிகப்பெரிய பிரச்சினையாகும். நாட்டில் உணவுத் தட்டுப்பாடு அதிகரித்தால், பணம் இல்லாதவர்கள் இறக்க நேரிடும்.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இந்த அரசாங்கத்தின் ஆயுட்காலம் கடவுளுக்கே தெரியும். குறுகிய எண்ணிக்கையிலான அமைச்சர்களே இடம்பெறுவர் ஆரம்பித்தில் கூறப்பட்டிருந்தாலும், நாளுக்கு நாள் அதன் எண்ணிக்கை அதிகரித்தவாறே உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை  பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கு நடத்தப்பட்ட மக்கள் போராட்டத்தை விடவும், இனிவரப்போகும் மக்கள் போராட்டம் பலம் வாய்ந்ததாக இருக்கும். பட்டினியால் வாடுவோரும், பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளும் என அனைவரும் இந்த போராட்டத்தில் பங்கேற்பர்.

புதிய அரசாங்கம் உருவாக வேண்டும் என்பதை விடவும் ஊழலற்ற அரசாங்கம்   அமைய வேண்டும். அதற்கு  தேர்தல்களில் ஊழலற்றவர்களின் பெயர்களை கட்சி முன்மொழிய வேண்டியது அவசியம்” என்றார்.