இயக்குநர் முத்தையாவுடன் இணையும் நடிகர் ஆர்யா

கிராமிய பின்னணியிலான படைப்புகளை உருவாக்குவதில் தனித்துவமான அடையாளம் பெற்றிருக்கும் இயக்குநர் முத்தையா இயக்கியுள்ள பெயரிடப்படாத புதிய படத்தில் ஆர்யா நடிக்கிறார்.

இந்த படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

‘கேப்டன்’ எனும் வெற்றிப் படத்தை அளித்த நடிகர் ஆர்யா, அடுத்ததாக மண்மனம் மாறாத படைப்புகளையும், உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அழுத்தமான படைப்புகளையும் உருவாக்கும் இயக்குநர் முத்தையாவுடன் கரம் கோர்த்திருக்கிறார்.

‘ஆர்யா 34’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக ‘வெந்து தணிந்தது காடு’ படப் புகழ் நடிகை சித்தி இத்னானி நடிக்கிறார்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்துக்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இந்த படத்தை ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் தொடக்க விழாவின்போது படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில்,

”நன்றியுணர்வு என்பது ஒவ்வொருவருக்கும் எவ்வளவு அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

திருக்குறளில் இடம்பெறும் ‘நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று’ எனும் குறளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, ராமநாதபுரத்தின் நிலவியல் பின்னணியில் இதன் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இம்மாதம் 17ஆம் திகதி முதல் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது.

எமது படைப்புகளில் கதையின் நாயகிக்கு அழுத்தமான பங்கு இருக்கும்.

‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்த சித்தி இத்னானி இந்தப் படத்தில் கதாநாயகியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

ஆர்யாவுக்கு இந்த படம் அவரது திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையும்” என்றார்.