ராஜபக்ஷர்களும் அவர்களின் சகாக்களும் அரச நிதியை கொள்ளையடிப்பதை நிறுத்தவில்லை – சரத் பொன்சேகா

பொருளாதார பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்கள் பட்டினியால் வாடும் நிலையில் கூட ராஜபக்ஷர்களும், அவர்களின் சகாக்களும் அரச நிதியை கொள்ளையடிப்பதை தவிர்த்துக் கொள்ளவில்லை.

மீண்டும் எழுவோம் என நாட்டை வலம் வருகிறார்கள். ராஜபக்ஷர்கள் நாட்டுக்காகவாவது இனி விலகிக்கொள்ள வேண்டும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

போராட்டத்தின் ஊடாக மாத்திரமே ஊழல்வாதிகளை விரட்டியடிக்க முடியும். ஊழலற்ற சிறந்த அரசியல் கட்டமைப்பை உருவாக்க நாட்டு மக்கள் ஒன்றுப்பட வேண்டும் எனவும் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) இடம்பெற்ற அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூல வரைபு மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூல வரைபில் ஒருசில விடயங்கள் சாதகமானதாக உள்ளதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர்,உட்பட பொதுஜன பெரமுனவின் ஒருசில உறுப்பினர்கள் 22ஆவது திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை அவதானிக்க முடிகிறது.

இரட்டை குடியுரிமை உடையவர்கள் இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க தகுதியற்றவர்கள் என்ற ஏற்பாடு 22ஆவது திருத்த வரைபில் உள்வாங்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இலங்கைக்கு சேவையாற்ற வேண்டுமாயின் இரட்டை குடியுரிமையை கொண்டிருக்க வேண்டிய தேவை கிடையாது. குறுகிய நோக்கத்துக்காக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் முறையற்ற வகையில் செயற்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அரசியல் திருத்தம் என்பது ஒரு அரசியல் நாடகம் ஊழல்வாதிகளுக்குக்கு இத்திருத்தங்களினால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை நாட்டை சீரழித்த குடும்பம் தற்போது மீண்டும் எழுவதாக குறிப்பிட்டுக் கொண்டு நாட்டை வலம் வருகிறார்கள்.நாட்டின் நலனையும்,எதிர்காலத்தையும் கருத்திற் கொண்டு ராஜபக்ஷர்கள் இனிவாயது விலகிக் கொள்ள வேண்டும்.

நாடு வங்குரோத்து நிலையடைந்து விட்டது,நாட்டு மக்கள் பட்டினியில் வாழ்கிறார்கள். ஆனால் ராஜபக்ஷர்களும்,அவர்களின் சகாக்களும் அரச நிதியை கொள்ளையடிப்பதை நிறுத்திக் கொள்ளவில்லை. போராட்டத்தினால் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

மக்கள் போராட்டத்தின் ஊடாக மாத்திரம் தான் ஊழல்வாதிகளை விரட்டியடிக்க முடியும்.ஆகவே சிறந்த ஊழலற்ற அரசியல் கலாசாரத்தை உருவாக்க நாட்டு மக்கள் ஒன்றுப்பட வேண்டும்.போராட்டம் நிச்சயம் வெற்றிப்பெறும் என்றார்.