எமது தவறை உணர 30 ஆண்டுகள் சென்றுள்ளன : எமது தலையீட்டுடன் இடம்பெற்ற தவறை சரி செய்ய முயற்சிக்கின்றோம் – டலஸ்

அரசியல் ரீதியில் இடம்பெற்ற தவறுகளில் எமது பங்களிப்பும் இருக்கிறது. எனவே நாம் தற்போது குற்றவாளிக் கூண்டிலேயே நிற்கின்றோம். எனவே இனியொரு போதும் குடும்ப அரசியலுடன் இணையவோ அதற்கு ஒத்துழைப்பு வழங்கவோ போவதில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

தேர்தல் வரைபடத்தை அழித்து , மிலேச்சத்தனமான தேர்தல் கலாசாரத்தை மீண்டும் உருவாக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.

இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு எதிராக அனைவரும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் டலஸ் அழகப்பெரும வலியுறுத்தினார்.

சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

சந்தேகத்திற்கிடமின்றி நானும் குற்றவாளிக் கூண்டிலேயே நிற்கின்றேன். அனைத்து அரசியல்வாதிகளும் குற்றவாளிக்கூண்டிலேயே நிற்கின்றனர்.

சுதந்திரத்தின் பின்னர் 74 ஆண்டுகளைக் கடந்துள்ளோம். இந்த 74 வருடங்களில் 64 வருடங்கள் 4 குடும்பங்களே நாட்டை ஆட்சி செய்துள்ளன.

இந்த நான்கு குடும்பங்களும் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கும் , அதனைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் மதத்தை அல்லது இனத்தை அல்லது மொழியை அல்லது யுத்தத்தை விற்றுள்ளன.

எமது தலையீட்டுடன் இடம்பெற்ற தவறை சரி செய்வதற்கே தற்போது முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம். எமது தவறை உணர்வதற்கு 30 ஆண்டுகள் சென்றுள்ளன.

ஒரு மனிதன் தவறிழைத்து , பின்னர் அதற்காக மன்னிப்பு கோருவதற்கு உரியுள்ளதல்லவா? இது தொடர்பில் மக்களே தீர்மானிக்க வேண்டும். எமது தலையீட்டுடன் தவறொன்று இடம்பெற்றுள்ளது என்றால் அந்த தவறை சரி செய்வதற்கு நான் தலைமைத்துவத்தை வழங்க வேண்டும்.

இனி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நான் குடும்ப அரசியலுடன் இணைய மாட்டேன். பொதுஜன பெரமுனவின் பதவிகளிலிருந்து இன்னும் ஏன் எம்மை நீக்கவில்லை என்று அக்கட்சியிடமே கேட்க வேண்டும்.

நாம் அந்தக் கட்சியின் உறுப்புரிமையை துறந்தாலும் , பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற அவசியமில்லை. பொதுஜன பெரமுன எண்ணினால் எம்மை நீக்கலாம்.

தேர்தல் வரைபடத்தை அழிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. மாகாணசபைகளுக்கு செய்ய முற்பட்டதையே உள்ளுராட்சி சபைகளுக்கும் செய்ய முற்படுகிறது.

மிலேச்சத்தனமான தேர்தல் கலாசாரமொன்றை மீண்டும் உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றனர். எனவே விரைவில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுக்குமாறு ஒறுமித்துக் கூறுகின்றோம்.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தினை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். எனினும் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு காணப்படும் கால எல்லையை இரண்டரை வருடங்களிலிருந்து , 4 வருடங்கள் வரை அதிகரிக்கவுள்ளதாகவும் , இரட்டை குடியுரிமை விவகாரத்தை மீண்டும் உள்ளடக்க முற்படுவதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு ஏதேனும் இடம்பெற்றால் 22 ஐ ஆதரிக்க முடியாது.

தற்போதுள்ள நிலைமையை எதிர்கொள்ள முடியாமல் மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்கி போராடுவர். ஆனால் அந்த போராட்டங்கள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களிலிருந்து மாறுபட்டவையாகக் காணப்படும் என்றார்.