ஆசிரியர்களுக்கு சீருடைக்கான கொடுப்பனவு திட்டமொன்றை ஆரம்பிக்க வேண்டும் – ரோஹினி கவிரத்ன

சிரியர்களுக்கு சீருடைக்கான கொடுப்பனவு திட்டமொன்றை ஆரம்பிக்க வேண்டும்.

பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்களின் தந்தையருடன் செல்வதற்காக ஆசிரியர்கள் இலகு ஆடையை கோருகிறார்கள் என அரசாங்கத்துக்கு சார்பான ஒருவர் கீழ்த்தரமான முறையில் குறிப்பிட்டுள்ளமை, ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் அவமதிப்பதாக கருதப்படுகிறது.

ஆகவே, இவ்விடயம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன கல்வி அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை (நவ 26) நடைபெற்ற 2023ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தின் பொதுநிருவாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தின்போதே அவர் இவ்வாறு கோரிக்கையை முன்வைத்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

மாணவர்களுக்கு சீருடை இருப்பதை போன்று ஆசிரியர்களுக்கு சீருடை கிடையாது. ஆனால், ஆசிரியர்கள் சேலையை சம்பிரதாயபூர்வமாக அணிகின்றனர்.

நான் ஆசிரியராக இருந்தால் சேலையையே அணிவேன். ஆனால், கீழ்த்தரமான நபரொருவர், ‘ஆசிரியைகள் சேலைக்கு பதிலாக வேறு உடையை அணிய அனுமதி கோருவது பாடசாலைக்கு வரும் மாணவர்களின் தந்தையர்களுடன் செல்வதற்கு இலகுவானதாக இருப்பதற்காகவே’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இது அனைத்து ஆசிரியர்களையும் அவமதிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது. இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேவேளை பொருளாதார ரீதியில் ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்றையவர்களுக்கு வழங்கப்படுவதை போன்று ஆசிரியர்களுக்கும் சீருடைக்கான கொடுப்பனவொன்றை வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.