தீர்மானங்களை எடுத்திருக்க வேண்டியது நான் அல்ல – முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் கப்ரால் குற்றச்சாட்டு

நாடு எதிர்காலத்தில் பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் என்று தெரிந்திருந்தும் அதற்கு முன்கூட்டியே உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் உரிய காலப்பகுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்று கொள்ளவில்லை என்றும் சிலர் என் மீது சாடுகிறார்கள்.

இருப்பினும் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வது போன்ற சில தீர்மானங்களை எடுத்திருக்கவேண்டியது நான் அல்ல. மேலும்  அதனை முறையாக முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரின் அமைச்சரவையே தீர்மானித்திருக்க வேண்டும் என்று மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நாடு பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் என்று தெரிந்திருந்தும் ஏன் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புகளை பெற்றுக் கொள்ளவில்லை என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள்.

இந்த தீர்மானத்தை என்னால் எடுக்க முடியாது. அதை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவையே எடுத்திருக்க வேண்டும்.

தற்போது சிலர் உரிய காலப்பகுதியில் மத்திய வங்கியின் ஆளுநர்  கப்ரால் சர்வதேச நாணய நிதியத்தை நாடவில்லை என்று கூறி அந்தப் பழியை என் மீது  சுமத்த பார்க்கிறார்கள்.

மேலும் என்னுடைய காலப்பகுதியில் 12 வீதமாக காணப்பட்ட வட்டி வீதங்கள் தற்போது 33, 34 மற்றும் 40 வீதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வட்டி வீதங்கள் இவ்வாறு காணப்படும் போது யாருக்கு வர்த்தகத்தை மேற்கொள்ள முடியும்.

இந்த கொள்கை நாட்டுக்கு பொருத்தம் என்றால் அல்லது நாட்டின்  பொருளாதாரம் பழைய நிலைமைக்கு திரும்பும் என்று கருதினால் மேற்கொள்ளுங்கள்.

அதன் ஊடாக போராட்டங்கள் வெடிக்காது என்று கருதினால் அது தொடர்பிலும் தேடிப்பாருங்கள். நான் எழுதிய புத்தகத்தில் இதனை பற்றி விரிவாக குறிப்பிட்டு இருக்கிறேன்.

சிலர் நான் எழுதிய புத்தகம் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்துள்ளதோடு அதனை படிக்கும் போது நகைச்சுவையாக இருக்கிறது என்கிறார்கள். பரவாயில்லை. அதை வைத்து அவர்கள் மகிழ்ச்சியடையட்டும்.  முதலில் புத்தகத்தை படியுங்கள். பின்னர் கருத்துக்களை கூறுங்கள்.

நான் மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்தேன். ஆனால் அமைச்சரவை பதவி விலகியது. இருப்பினும்  ஜனாதிபதிக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்று கருதி மத்திய வங்கியின் புதிய ஆளுநர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என்று கருதினால் தெரிவு செய்யுமாறு ஜனாதிபதியிற்கு கூறினேன். ஆனால் நான் நாட்டை விட்டு தப்பிச் செல்ல தீர்மானிக்கவில்லை என்றார்.