பல்கலைக்கழகங்களில் பயிலும் பிக்கு மாணவர்கள் தொடர்பாக கடுமையாக சட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை – ஜனாதிபதி

காவி உடை அணிந்தமைக்காக தர்மத்துக்கு எதிராக  செயற்பட இடமளிக்க முடியாது. அதனால் பல்கலைக்கழகங்களில் பயிலும் பிக்கு மாணவர்கள் தொடர்பாக கடுமையாக சட்டத்தை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (நவ. 29) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில்  சுகாதார அமைச்சு மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு விடயதானங்களுக்கான  நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

புத்தசாசனத்தில் பிரச்சினைகள் பல உள்ளன. துறவரத்தை பேணும் அனைவரும் தர்மத்தின் அடிப்படையில் செயற்பட வேண்டும். தேரர்கள் அதனை பின்பற்றாவிட்டால் பாரிய பிரச்சினைகள் ஏற்படும்.

புத்த பெருமானின் காலத்தில் இருந்து இது நடக்கின்றது. அங்குலிமால என்பவர் காவி உடையை அணிந்தகொண்டே புத்த பெருமானுக்கு எதிராக நடந்துகொண்டார்.

இவ்வாறான நிலைமையில் தேரர்களுக்கு இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் வகையில் அறநிலையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் பிக்குமார் பதிவு செய்தல் ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்ட வரைபு செய்யப்பட்டுள்ளது.

முன்னைய காலங்களில் அரசர்களே அதனை கட்டுப்படுத்தினர். பராக்கிரமபாகு காலத்தில் சில தேரர்களுக்கு மரண தண்டனையும் விதித்துள்ளார்.

அவ்வாறு எங்களுக்கு செய்ய முடியாது. அதற்கான அதிகாரமும் கிடையாது. ஆனால் இப்போது மகாநாயக்க தேரர்கள் இப்போது கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பொறுப்பேற்று செயற்படுத்துகின்றனர். பௌத்த நிகாயக்கள் இது தொடர்பில் செயற்படுகின்றன.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் நாங்களும் அவதானம் செலுத்த வேண்டும். குறிப்பாக பல்கலைக்கழகங்களில் கற்கும் பிக்குகள் தொடர்பிலேயே நாங்கள் அவதானம் செலுத்தியுள்ளோம்.

அவ்வாறான பிக்கு ஒருவர் மகாநாயக்க தேரரை தூற்றுகின்றார். இவர்கள் யார்? காவி உடையை அணிவதால் தர்மத்திற்கு எதிராக செயற்பட விசேட பாதுகாப்பை பெற்றுக்கொள்ள முடியாது. இதனால் இந்த சட்டமூலம் அவசியமாகும்.

பல்கலைக்கழகங்களுக்கு பிக்கு மாணவர்களாக பெருமளவானவர்கள் உள்வாங்கப்படுகின்றனர். இறுதியாக அவர்கள் சாதாரண வாழ்க்கையுடனேயே அங்கிருந்து வெளியேறுகின்றனர்.

முதலில் இது தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும். அதாவது துறவரத்துடன் வந்தால் அவ்வாறே இருக்க வேண்டும். பட்டத்தையும் துறவரத்துடனேயே வழங்க வேண்டும். பின்னர் அதனை மாற்ற முடியாது. மாறும் நடவடிக்கைகளை தங்களின் மகாநாயக்க தேரர்களிடம் சென்றே பேசிக்கொள்ள வேண்டும்.

அத்துடன் பல்கலைக்கழங்களில் பிக்குமார் செயற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு மகாநாயக்க தேரர்களுக்கு அதிகாரம் வழங்கவேண்டும்.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தர்மத்தையும் சங்கசபையையும் குழப்பிக்கொண்டுள்ளார். பராபவ சூத்திரத்தில் தேரர்கள் தொடர்பில் எதுவும் தெரிவிக்கவில்லை. அந்த சூத்திரம் தொடர்பில் தெளிவில்லாமல் எதிர்க்கட்சித் தலைவர் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.அதை அவர் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.