தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கவை-சார்ள்ஸ் நிர்மலநாதன்

வெடுக்குநாறி ஆதிலிங்கேஷ்வரர் ஆலயத்தின் வழிபாடுகளுக்கு இடமளிக்க வேண்டும். தொல்பொருள் திணைக்களத்தின் ஒருசில அதிகாரிகளின் செயற்பாடுகள் பிரச்சினைளை தீவிரப்படுத்தி, இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையில் காணப்படுகிறது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.29) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் சுகாதாரத்துறை மற்றும் புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள், கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு என்பதிலே பிழை காணப்படுகிறது. இந்த அமைச்சு மத விவகாரங்கள் கலாசார அலுவல்கள் அமைச்சாக குறிப்பிடப்பட வேண்டும் அல்லது மத விவகாரங்கள் என்பதற்கு பதிலாக நாட்டில் உள்ள அனைத்து மதங்களும் அதில் உள்வாங்கப்பட வேண்டும்.

வவுனியா மாவட்டத்தில் வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஷ்வரர் ஆலயத்தில் இந்துக்கள் ஆரம்ப காலத்தில் இருந்து வழிபாடுகளில் ஈடுப்பட்டார்கள்.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஆதிலிங்கேஷ்வரர் ஆலயத்தில் தொல்பொருள் சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் வழக்கு தாக்கல் செய்தது.

ஆதிலிங்கேஷ்வரர் ஆலய பகுதியில் தொல்பொருள் சின்னங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தப்படவில்லை என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே தமிழர்களின் பாரம்பரிய சின்னங்களை திட்டமிட்டு அழிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் கைவிட வேண்டும். வெடுக்குநாறி மலையில் இந்துக்கள் பாரம்பரிய வழிமுறைகளுக்கு அமைய வழிபாடுகளில் ஈடுப்பட அனுமதி வழங்கப்பட வேண்டும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் குறுந்தூர் மலை விவகாரம் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் குறுந்தூர் கோயிலுக்கு அப்பாற்பட்ட காணி விடயம் தொடர்பில் குறிப்பிடுகிறேன்.

இப்பிரதேசத்தில் உள்ள காணிகளில் 5 அல்லது 6 ஏக்கர் காணியை தவிர்த்து ஏனைய காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி மற்றும் விடயதானத்pற்கு பொறுப்பான அமைச்சர் குறிப்பிட்டுள்ள போதும் மாவட்ட அரச அதிகாரிகள் அதற்கு எதிராக செயற்படுகிறார்கள்.

தொல்பொருள் திணைக்களத்தின் ஒருசில அதிகாரிகளின் செயற்பாடுகள் பிரச்சினைகளை தீவிரப்படுத்தும் வகையில் காணப்படுகிறது.

இனங்களுக்கிடையில் தொடர்ந்து முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் செயற்படுகிறார்கள். ஆகவே இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.