மருந்து உற்பத்தி வழிகாட்டலில் மாற்றத்தை ஏற்படுத்தினால் எதிர்கால பரம்பரைக்கு பாரிய பிரச்சினையாக அமையும் – ராஜித

தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் மருந்துகளை பதிவு செய்யும் வழிகாட்டல் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுடன் தயாரிக்கப்பட்டதாகும்.

அதனால் மருந்து உற்பத்தி செய்யும் வழிமுறையில் ஒரு மாற்றத்தை மேற்கொண்டாலும்  உலக சுகாதார அமைப்பினால் தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை கறுப்புப் பட்டியலுக்கு சேர்க்கும் அபாயம் இருக்கின்றது.

அவ்வாறு இடம்பெற்றால் அது இலங்கையின் எதிர்கால பரம்பரையினருக்கு பாரிய பிரச்சினையாக அமையும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்  சுகாதார அமைச்சு மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு விடயதானங்களுக்கான  நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையிலேயே மருந்து பதிவு செய்யும் வழிகாட்டல் இருக்கின்றது. இந்த வழிடகாட்டல் உலக சுகாதார அமைப்பினர் வழிகாட்டலுடன் செய்யப்பட்டது. இந்த வழிகாட்டலில் இருந்து ஒரு சிறிய மாற்றத்தை செய்ய முற்பட்டாலும் அது பாரிய பிரச்சினையை ஏற்படுத்தும் நிலை இருக்கின்றது.

இலங்கையில் மருந்து ஒன்றை உற்பத்தி செய்து அதனை பதிவு செய்வதற்கு வழிகாட்டல் இருக்கின்றது.அந்த வழிகாட்டல் அவ்வாறே பின்பற்றப்படவேண்டும்.

ஒரு மருந்தை உற்பத்தி செய்து அதனை அனுமதிக்க தொடர்ந்து 6மாதகாலம் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.

ஆனால் இந்த நிபந்தனையை மாற்றியமைத்து, அதனை 3மாதமாக குறைப்பதற்கு அமைச்சரவையில் அனுமது கோரப்பட்டிருக்கின்றது. இந்த விடயத்தில் அமைச்சரவைக்கு எந்த அதிகாரமும் இல்லை. சுயாதீன ஆணைக்குழுவுக்கே அது தொடர்பான அதிகாரம் இருக்கின்றது.

அதனால் மருந்து உற்பத்தி தொடர்பான வழிகாட்டலில் ஒரு தினத்தையேனும் குறைத்தாலும் உலக சுகாதார அமைப்பு தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையை கறுப்புப்பட்டியலுக்கு உள்வாங்கலாம்.

அவ்வாறு இடம்பெற்றால் இலங்கையில் தயாரிக்கப்படும் மருந்து, கொண்டுவரப்படும் மருந்து வகையின் தரம் தொடர்பில் பாரிய பிரச்சினை ஏற்படுகின்றது. அப்போது மருந்து குடிப்பதற்கு மக்கள் அச்சப்படும் நிலை ஏற்படும்.

அதனால் தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையில் இருக்கும் மருந்துகளை பதிவு செய்யும் வழிகாட்டல்களில் எதனையும் திருத்துவதற்கு இடமளிக்கவேண்டாம். அது இலங்கையின் எதிர்கால சந்ததியினருக்கு பாரிய பிரச்சினையாக அமைந்து விடும்.

அத்துடன் வைத்தியர்கள் ஓய்வு பெறும் வயதை 60வரை குறைத்துள்ளதால் இந்த வருடத்தில் பாரியளவில் வைத்தியர்கள் ஓய்வு பெற்றுச்செல்ல இருக்கின்றனர்.

குறிப்பாக கிராமப்புற வைத்தியசாலைகளில் விசேட வைத்தியர்கள் ஒன்று அல்லது இரண்டு பேரே இருக்கின்றனர். அவர்களில் ஓய்வு பெற்றுச்சென்றால், அந்த இடத்துக்கு மாற்றீடு செய்ய தேவையான வைத்தியர்கள் இல்லை. நாட்டில் மொத்தமாக 24 500 வைத்தியர்களே இருக்கின்றனர்.

உலக சுகாதார அமைப்பின் தரவுகளுக்கு அமைய வைத்தியர், குடும்சுகாதார வைத்தியர், தாதியர் ஆகியோர் மக்கள் சனத்தொகையில் ஆயிரத்துக்கு 4,45 பேர் இருக்கவேண்டும்.

எமது நாட்டில் 220 இலட்சம் பேருக்கு ஒரு இலட்சத்தி 2ஆயிரம் பேர் இருக்கவேண்டும். ஆனால் இந்த மூன்று பிரிவுகளிலும் மொத்தமாக 77ஆயிரத்தி 500பேரே இருக்கின்றனர். 24ஆயிரத்தி 500பேர் பற்றாக்குறையாக இருந்து வருகின்றது. இந்த பற்றாக்குறையை நிரப்ப 5வருடத்துக்கும் அதிக காலம் தேவைப்படும்.

அத்துடன் நாட்டில் 52வகையான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இருந்து வருவதாக சுகாதார அமைச்சின் இராஜாங்க அமைச்சின் செயலாளர் தெரிவித்திருக்கின்றார்.

குறிப்பாக உயிர் பாதுகாப்பு மருந்து 14 இல் மாரடைப்பு, புற்றுநோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும்  மருந்துகளுக்கு தட்டுப்பாடு இருந்து வருகின்றது. அத்தியாவசிய மருந்து பொருகள் 636இல் 155 மருந்து பொருட்களே இருக்கின்றன.

அத்தியாவசியம் இல்லாத மருந்துப்பொருட்கள் 400இல் 190 இருக்கின்றது. மருந்து தட்டுப்பாட்டுக்கு நிதி பிரச்சினை மாத்திரம் காரணமில்லை.

மாறாக மருந்து கொண்டுவரும் நடவடிக்கையின் தாமதமும் தட்டுப்பாட்டுக்கு காரணம் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். அதனால் மருந்து தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.