ஆந்திர முதலமைச்சரின் தங்கையுடன் சேர்த்து காரை இழுத்துச் சென்ற தெலுங்கானா பொலிஸார்

ஆந்திர மாநில முதலமைச்சர் வை.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையான வை.எஸ். ஷர்மிளா செலுத்திய காரை அவருடன் சேர்த்து தெலுங்கானா பொலிஸார் கிரேன் வாகனம் மூலம் இழுத்துச் சென்ற சம்பவம் இன்று இடம்பெற்றது.

ஆந்திர முதலமைச்சரும் வை.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியின் இளைய சகோதரியான வை.எஸ். ஷர்மிளா, வை.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியின் ஸ்தாபகராகவும் தலைவராகவும் விளங்குகிறார்.

தற்போது தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவின் அரசாங்கத்துக்கு எதிராக பேரணியொன்றை நடத்தி வருகிறார்.

 

இந்நிலையில், நேற்று, கே. சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்டிர சமித்தி (பாரத் ஷ்ட்டிர சமித்தி) கட்சியின் ஆதரவாளர்களுக்கும் வை.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதன்போது வை.எஸ். ஷர்மிளாவின் காரும் சேதமடைந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, தெலுங்கானா முதலமைச்ரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை நோக்கி அக்காரை செலுத்திச் செல்வதற்கு வை.எஸ். ஷர்மிளா முற்பட்டார்.

ஆனால், அக்காரை தெலுங்கானா பொலிஸார் தடுத்து நி;றுத்தினர். காரிலிருந்து இறங்குவதற்கு ஷர்மிளா மறுத்த நிலையில், அவர் காருக்குள் அமர்ந்த நிலையில் இழுவை வாகனம் ஒன்றின் மூலம் அக்காரை பொலிஸார் உள்ளூர் பொலிஸ் நிலைமொன்றுக்கு இழுத்துச் சென்றனர்.