சீனாவுடனான பொற்காலம் முடிந்துவிட்டது : பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்

சீனாவுடனான பொற்காலம் முடிந்துவிட்டதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

சீனாவுடனான வெளியுறவு குறித்து பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பேசும்போது, “தற்போதைய காலகட்டங்களில் உலக அளவில் சீனாவின் முக்கியத்துவத்தை நாம் புறக்கணித்துவிட முடியாது.

நான் ஒன்றை தெளிவுப்படுத்திக் கொள்கிறேன். சீனாவுடனான பொற்காலம் முடிந்துவிட்டது. நாங்கள் பனிப்போர் போன்ற சொல்லாடலை பயன்படுத்தவில்லை.

சீனா நமக்கு பெரிய சவாலை முன் வைக்கிறது. ஹொங்காங்கின் சுதந்திரத்தை குறைக்கும் ஜி ஜின்பிங் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துகளை முன்வைக்கலாம்.

சீனாவை அணுகுவதில் ஒரு பரிணாம வளர்ச்சியை நாம் மேற்கொள்ள இருக்கிறோம். சீனா மற்றும் இந்தோனேஷியாவுடனான உறவில் அரசு மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறது.

பிரித்தானிய வெளியுறவுக் கொள்கை புதிய ஆண்டில் வெளியிடப்படும். இது காமன்வெல்த் நாடுகளுடனான ஒத்துழைப்பை அதிகரிக்கும். ” என்று தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய  பிரதமராக இருந்த லிஸ் ட்ரஸ், பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த அக்டோபர் 20ஆம் திகதி அறிவித்ததையடுத்து, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுவால் ரிஷி சுனக் தெரிவு செய்யப்பட்டு பிரித்தானிய  பிரதமராக பதவியேற்றார்.

பணவீக்கத்தால் பிரித்தானியாவில் விலைவாசி கடுமையாக அதிகரித்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் தினசரி உயர்ந்து வருவதால் நடுத்தர வர்க்கத்தினர் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

இந்த சூழலில் பிரதமர் ரிஷி சுனக் பிரித்தானிய பொருளாதாரத்தை வலுப்படுத்த புத்துணர்வான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.