சரத் பொன்சேக்கா அன்று சுமார் 70,000 பேரை கொன்று குவித்தவர்! தென்னிலங்கையில் சர்ச்சை

ஜனநாயகம் மனித உரிமைகளை இன்று எமக்கு கற்றுத்தரும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா அன்று சுமார் 70,000 பேரை கொன்று குவித்தவராவார். அவ்வாறான ஒருவரால் என்மீது சுமத்தப்படும் போலியான சேறு பூசல்களை  ஏற்றுக் கொள்ள முடியாது என முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க சபையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நோக்கி குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (2) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு குழு நிலை விவாதத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆற்றிய உரையைத்  தொடர்ந்து சபையில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது. அவர் ஆற்றிய உரைக்கு ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

வனஜீவராசிகள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குழு நிலை விவாதத்தில் சேறு பூசல்கள் மாத்திரமே உள்ளன என ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிட்டு தமது எதிர்ப்பை தெரிவிக்க உரையாற்ற அனுமதி கோரினார்கள்.

எனினும் இந்த பழக்கத்தை நிறுத்திக் கொள்ளுமாறு சபாநாயகர் உறுப்பினர்களை நோக்கிக் குறிப்பிட்டார். ”அவ்வாறாயின் சேறு பூசலையும் நிறுத்த சொல்லுங்கள். வனஜீவராசிகள் அமைச்சின் விவாதத்தின் போது சேறு பூசல்களை இடம்பெறுகிறது.

காலி முகத்திடலுக்கு மிருகங்கள் வந்தால் அடித்து விரட்டட்டும்” என ஆளும் தரப்பின் பின்வரிசை உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.

இதனைத் தொடர்ந்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவை இருக்கையில் அமருமாறு சபாநாயகர் குறிப்பிட்டார். இதன்போது எழுந்து உரையாற்றிய முன்னாள் வனஜீவராசிகள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, ”எனது பெயரைக் குறிப்பிட்டால் நான் பதிலளிக்க வேண்டும்.

நான் கடந்த 9 மாதங்களாக பாராளுமன்றத்தில் உரையாற்றவில்லை.” என்றார். இதன்போது குறிக்கிட்ட சபாநாயகர் , ”உங்களின் பெயரை குறிப்பிடவில்லை” என்றார்.

இதன்போது சரத் பொன்சேக்கா விமலவீர திஸாநாயக்கவை நோக்கி , ”யானை தடுப்பு கால்வாய் அமைத்தது முட்டாள் தனமானது” என்று குறிப்பிட்டார். இவர் அமைச்சராக பதவி வகிக்கும் போது ஒன்றும் செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த விமலவீர திஸாநாயக்க , ”அரசாங்கத்தின் செலவு இல்லாமல் யானை கால்வாய் அமைத்தேன். அதனால் இன்று அந்த பிரதேச மக்கள் பாதுகாப்பாக உள்ளார்கள்.

60 000 , 70 000 பேரை கொன்றவர் இன்று எமக்கு ஜனநாயகம் பற்றி குறிப்பிட வருகிறார். சண்டியர்களை பாதுகாத்த பீல்ட் மார்ஷல் எமக்கு ஆலோசனை வழங்க வருகிறார் என்றார்.