தோல்வியடைந்த நாடு என சஜித் குறிப்பிட்டாரா ? நாடாளுமன்றத்தில் சர்ச்சை

எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாசவின் கருத்தை அவைக்குறிப்பிலிருந்து நீக்குவதற்கு சபாநாயகர் முயன்றதால் நாடாளுமன்றத்தில் இன்று குழப்பநிலை நிலவியது.
நாடாளுமன்றத்தில் இன்று ஆற்றிய உரையின் போது எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தோல்வியடைந்த நாடு என குறிப்பிட்டுள்ளார் என தெரிவித்து சபாநாயகர் அதனை நீக்குவதற்கு முயன்றார்.
இதன் காரணமாக அவையில் குழப்பநிலையேற்பட்டது.


நாட்டிற்கான தனது கடமையில் தற்போதைய அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது,என்பதை இந்தஅவையின் கவனத்திற்கு கொண்டுவரவிரும்புகின்றேன் என குறிப்பிட்டிருந்த சஜித் பிரேமதாச நாட்டின் இரண்டாவது மூன்றாவது காலாண்டிற்கான பொருளாதார நிலை குறித்த புள்ளிவிபரங்களை நாட்டிற்கு நாடாளுமன்றத்திற்கு வழங்குவதற்கு இந்த அரசாங்கம் தவறிவிட்டது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனை சுட்டிக்காட்டிய சபாநாயகர் இலங்கை தோல்வியடைந்த நாடு என நீங்கள் தெரிவித்திருப்பது தவறு ஆகவே உங்கள் உரையிலிருந்து இதனை அகற்ற அனுமதியுங்கள் என கோரினார்.


எனினும் எதிர்கட்சி தலைவர் தான் ஒருபோதும் தான் ஒருபோதும் இலங்கை தோல்வியடைந்த நாடு என குறிப்பிடவில்லை என தெரிவித்ததுடன் அரசாங்கத்தின் தோல்வியடைந்த திறமையற்ற செயற்பாடுகளையே குறிப்பிட்டேன் என தெரிவித்தார்.
தோல்வியடைந்த நாடு என நான் குறிப்பிடவில்லை,இதனை நான் வலியுறுத்துகின்றேன், எனக்கு எனது ஆங்கிலம் தெரியும்,என மொழியாற்றலுக்கு மதிப்பளியுங்கள்,நான் தோல்வியடைந்த நாடு என ஒருபோதும் குறிப்பிடவில்லை என தெரிவித்தார்.