அரசியல், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – பிரசன்ன ரணதுங்க

வன்முறை போராட்டத்தில் ஈடுபட்ட போதைப்பொருள் பாவனையாளர்கள், விபசாரிகள் மற்றும் சண்டியர்களின் நோக்கத்தை செயற்படுத்தினால் நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாத நிலை ஏற்படும்.

அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண 225 மக்கள் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (டிச 03) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு,தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ள போது அதற்கு தடையாக ஒரு தரப்பினர் செயற்படுகிறார்கள். போராட்டத்தினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. போராட்டத்தை தீவிரப்படுத்தி அரசியல் இலாபம் பெற்றுக்கொள்ள முறையற்ற வகையில் செயற்படுகிறார்கள்.

ஒருசில அரசியல்வாதிகள் போராட்டத்தை நியாயப்படுத்தும் வகையில் சபையில் உரையாற்றுகிறார்கள். ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்திய அமைதி வழி போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மக்களாணையுடன் ஆட்சிக்கு வர முடியாத அரசியல் தரப்பினர் ஜனநாயகம் என்று குறிப்பிட்டுக் கொண்டு வன்முறை போராட்டத்தில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது.

நாடு என்ற ரீதியில் எவ்வாறு முன்னேற்றமடைய வேண்டும் என்பது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.ரணில் ராஜபக்ஷ அரசாங்கம் என்று எதிர்தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.

பெரும்பான்மை பலத்துடன் ராஜபக்ஷர்கள் ஆட்சியமைத்தார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்த மக்களாணையுடன் ஆட்சியமைத்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க என்பதற்கல்ல. அரசியலமைப்பிற்கு அமைய பாராளுமன்றத்தின் ஊடாக அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு ஒத்துழைப்பு வழங்குகிறோம்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு பலமுறை அழைப்பு விடுத்தார்.

அவர்கள் சவால்களை பொறுப்பேற்கவில்லை. ஒருவேளை சஜித் பிரேமதாஸ அரசாங்கத்தை பொறுப்பேற்றிருந்தால், அப்போது சஜித் ராஜபக்ஷ அரசாங்கம் என்று குறிப்பிட வேண்டும். அநுர குமார அரசாங்கத்தை பொறுப்பேற்றிருந்தால் அநுர ராஜபக்ஷ அரசாங்கம் என்று குறிப்பிட்டிருக்க நேரிட்டிருக்கும்.

சவால்களை விமர்சிக்காமல் அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு பலமுறை குறிப்பிட்டும் அதனை எதிர்க்கட்சிகள் கவனத்தில் கொள்ளவில்லை. ஆசை பயம் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு செயற்படும் போது எவ்வாறு சவால்களை வெற்றிக் கொள்ள முடியும்.