ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைத்து கட்சிகளும் சுதந்திரமாக அரசியலில் ஈடுபட அனுமதிக்கப்பட வேண்டும் என்ற தனது முதன்மையான கடமையை அதிபர் ரணில் விக்ரமசிங்க நிறைவேற்றியுள்ளார் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதன்படி, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் தற்போது சுதந்திரமாக நடமாடக்கூடிய உரிமையும் அரசியலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளதாக பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை அதிபர் ரணில் விக்ரமசிங்க எடுப்பார் எனவும் நாட்டை சிறந்த பாதையில் கொண்டு செல்வார் எனவும் பசில் ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் அதிபராக ரணில் விக்ரமசிங்கவை தெரிவு செய்ய தமது கட்சி எடுத்த முடிவு சரியானது எனவும் அது தற்போது நிரூபணமாகியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.