இலங்கையின் கடன் நெருக்கடி தொடர்பில் பேச்சுவார்த்தைக்கு நாணய நிதியம் , உலக வங்கி பிரதானிகளுக்கு சீனா அழைப்பு

இலங்கை போன்ற பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் கடன் நெருக்கடி உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பிரதானிகளுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.

அதற்கமைய இவ்வாரம் சர்வதேச பொருளாதார மற்றும் நிதி நிறுவனங்களின் பிரதானிகள் குழுவொன்று பீஜிங்கிற்கு விஜயம் செய்யவுள்ளதாக சீன வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்தோடு பீஜிங்கில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் மா ஓ கின்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் ,

சீனாவிற்கு சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச பொருளாதார மற்றும் நிதி நிறுவனங்களுடன் நீண்ட கால பலம்மிக்க தொடர்புகள் காணப்படுகின்றன. கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஏதேனும் அறிவிப்பினை அறிவிக்க வேண்டியேற்பட்டால் , வரும் நாட்களில் அது தொடர்பில் அறிவிப்பதற்கு சீன வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தயாராகவுள்ளது.

இலங்கையின் கடன் நெருக்கடி தொடர்பில அவதானிக்கும் போது , பொருளாதார நெருக்கடிகள் மற்றும் சவால்களுக்கு சீன முக்கியத்துவமளித்து கவனம் செலுத்துகின்றது. இலங்கை அதன் நெருக்கடிகளை உரிய முறையில் தீர்த்துக் கொள்வதற்காக செயற்பட்டு வரும் நிதி நிறுவனங்களுக்கு சீனாவின் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும்.

இலங்கை தற்போதைய நெருக்கடிகளிலிருந்து மீண்டு , நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்திக் கொள்வதற்காக குறித்த நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்கள் சீனாவுடன் சாதகமான முறையில் செயற்படும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம் என்று குறிப்பிட்டார்.

இந்நிலையிலேயே இலங்கையின் கடன் நெருக்கடியை தீர்த்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா மற்றும் உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் ஆகியோருக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளதாக சீன வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் அவற்றிலிருந்து மீண்டு , நிலையான அபிவிருத்தியை அடைவதற்காக இந்த பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.