பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களை கண்டறிய பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்க தயார் – ஜனாதிபதி

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய காரணமானவர்களை கண்டறிந்து தண்டனை பெற்றுக்கொடுக்க நான் தயார். பாராளுமன்றம் அனுமதித்தால் அதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு அல்லது பாராளுமன்ற தெரிவுக் குழு அமைக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (டிச.08) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு, மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு விடயதானங்களுக்கான  நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்,  ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் கபீர் ஹாசிம் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

கபீர் ஹாசிம் எம்.பி. தெரிவிக்கையில், மின்சார சபையின் நட்டத்தை ஈடுசெய்ய மின் கட்டணத்தை அதிகரிப்பதைத் தவிர மாற்று வழி இல்லை என நீங்கள் தெரிவித்தீர்கள்.

மக்கள் இதனை பொறுத்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தீர்கள்.  மக்களுக்கு பிரச்சினை இருக்கின்றது. இதற்காக மக்கள் அர்ப்பணித்து இருக்கின்றனர்.

ஆனால் எங்களுக்கு ஒரு பிரச்சினை இருக்கின்றது. அதாவது, இந்த பொருளாதார நெருக்கடி 2020இல் மேற்கொள்ளப்பட்ட பிழையான தீர்மானங்கள் காரணமாக விரைவாக இடம்பெற்றதாக ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறான பிழையான தீர்மானங்களை எடுத்த அதிகாரிகள் அரசியல்வாதிகள் இன்னும் சுதந்திரமாக செயற்படுகின்றனர்.

குறிப்பாக நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஷ் கடன் வழங்குவதை நிறுத்துவதாக தெரிவித்தார். அதேபோன்று நிவாட் கப்ரால் டொலர் வருவதாக தெரிவித்து பாராளுமன்றத்தை பிழையாக வழிநடத்தினார்.

இவர்களுக்கு எதிராக இன்றுவரை விசாரணை எதுவும் இடம்பெறவில்லை. அதனால் இவர்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஆரம்பமாக ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து நாட்டுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துங்கள். முறையாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றேன் என்றார்.

இதற்கு ஜனாதிபதி தொடர்ந்து பதிலளிக்கையில், பாராளுமன்றம் அனுமதித்தால் ஜனாதிபதி ஆணைக்குழு அல்லது பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கலாம். எல்லோரும் இணக்கம் என்றால் பாராளுமன்ற தெரிவுக்குழு அமைப்போம்.

இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. எமது இந்த முறைமையில் பல கட்டமைப்புகளில் பிரச்சினைகள் இருக்கின்றன. வரி சலுகை வழங்கியமையே இந்த பிரச்சினைக்கு காரணம் என முன்னாள் ஜனாதியும் ஏற்றுக்கொண்டுள்ளார். அதனால் ஆரம்பமாக எமது கட்டமைப்பில் இருக்கும் பிரச்சினைகளை தீர்க்கவேண்டம் என்றார்.