இலங்கைக்கு அடுத்ததாக ஆப்கானிஸ்தான் உள்ளது : இந்நிலையிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் – ஜனாதிபதி நம்பிக்கை

ஜப்பானுக்கு அடுத்ததாக வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்க திட்டமிடப்பட்ட எமது நாடு இன்று ஆப்கானிஸ்தானை விட ஒரு படி மேலுள்ளது.

எமக்கு அடுத்த படியாக ஆப்கானிஸ்தான் மாத்திரமேயுள்ளது. எவ்வாறிருப்பினும் இந்த நிலைமையிலிருந்து நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கொழும்பு ரோயல் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக காலநிலை செழுமைத் திட்டத்தை தயாரிக்குமாறு நான் ஆலோசனை வழங்கியிருக்கின்றேன். நாம் இந்நாட்டின் இளைஞர்களுக்கு சிறந்தவொரு எதிர்காலத்தை வழங்க வேண்டும். எதிர்காலத்தில் நாம் என்ன செய்யவுள்ளோம் என்பதை தெரிவிப்பதற்கான சுதந்திரத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

நாட்டில் அரசியல் கலாசாரம் மாற்றமடைய வேண்டும். ஜப்பானுக்கு அடுத்ததாக வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்க திட்டமிடப்பட்ட எமது நாடு இன்று ஆப்கானிஸ்தானிக்கு மாத்திரம் ஒரு படி மேலுள்ளது. வாக்களித்த பெரும்பாலான இளைஞர்கள் தற்போது நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். எவ்வாறிருப்பினும் இந்நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று நான் கருதுருகின்றேன்.

அடுத்த வரும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக காலநிலை செழுமைத் திட்டத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான அலுவலகம் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது. காலநிலை மாற்றங்களை தடுப்பதற்காக கருத்துள்ள நிலைப்பாடுகளை வெளிப்படையாக பேசுவதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது என்றார்.