ஓய்வூதிய வயதை உறுதிப்படுத்த வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கோரிக்கை

பணியாளர் ஆலாேசனைக்குழுவில் எடுத்த தீர்மானத்துக்கு அமைய அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதை உறுதிப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (13) விசேட கூற்றோன்றை முன்வைத்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது தொடர்பாக சபாநாயகரான உங்கள் தலைமையில் பணியாளர் ஆலாேசனை குழுவில் தீர்மானம் ஒன்றை மேற்கொண்டோம்.

அந்த தீர்மானத்தில் நீங்களும் நானும் சபைமுதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்தவும் கைச்சாத்திட்டோம். திறைசேரின் கொள்கையை அடிப்படையாகக்கொண்டு இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய அதில் கைச்சாத்திடவில்லை.

அத்துடன் அரசாங்கம் ஓய்வு பெறும் வயதை 60வயதில் இருந்து 65வயதாக அதிகரிக்க தீர்மானித்ததுடன் அந்த காலப்பகுதில் பாராளுமன்ற ஊழியர்களின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் வங்கிகளில் இலட்சக்கணக்கில் கடன் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் ஓய்வு பெறும் வயதை மீண்டும் 60ஆக மாற்றப்பட்டுள்ளதால் வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு குறித்த கடன் தொகையை இந்த மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறு உத்திரவிடப்பட்டிருக்கின்றது. எவ்வாறு இதனை செய்ய முடியும்.

அதனால் பொதுவானதொரு தீர்மானமாக ஓய்வு பெறும் வயதை 61 என பணியாளர் ஆலாேசனை குழுவின் நாங்கள் தீர்மானித்தோம். அந்த தீர்மானத்தை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.