தகவல் தொழில்நுட்பத்தில் சீனாவை விட இந்தியா மிகவும் முன்னிலையில் உள்ளது – சீன தொழில்நுட்ப நிபுணர்

‘தி ரைஸ் ஆஃப் இந்தியன் ஐடி’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் மைக் லியு, உலகச் சந்தைகளில், குறிப்பாக தொழில்நுட்ப துறையில் இன்னும் ஆதிக்கம் செலுத்தும் இந்திய நிறுவனங்களைப் போலல்லாமல், சீனாவின் சாப்ட்வேர் வருவாயானது பெரும்பாலும் உள்ளகத்திலிருந்து வருகிறது என்றார்.

சீனாவின் தகவல் தொழில்நுட்ப வருவாயில் 95 சதவீதத்திற்கும் அதிகமானவை உள்நாட்டு சீன சந்தையில் இருந்து வருகிறது என்றும் குறிப்பிட்டார்.

இந்தியாவின் தொழில்நுட்ப துறை, அதன் பொருளாதாரத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். உலகளாவிய சந்தைகளில் சீனாவை விட முன்னணியில் இந்தியா உள்ளது. ஆனால் சீனாவின் நிறுவனங்கள் ஈ-காமர்ஸ் மற்றும் கிளவுட் சேவைகளில் சிறப்பாக செயல்படுகின்றன.

பல தசாப்தங்களாக இந்திய மற்றும் சீன தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பற்றிய நுண்ணறிவை வழங்கும் புத்தகம் இப்போது சீன மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் ஆங்கிலத்தில் வெளியிடப்படும். எழுத்தாளர் மைக் சீனாவில் பிறந்தவர். இவர்  ஹெச்பி போன்ற பன்னாட்டு நிறுவனங்களைத் தவிர இந்திய மற்றும் சீன நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார்.

சீனாவின் தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான சீனாவின் மென்பொருள் வணிக வருவாய் 5.456 டிரில்லியன் யுவானை (797.26 பில்லியன் டொலர்) எட்டியுள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு 10.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

இரு நாடுகளிலும் உள்ள தகவல் தொழில்நுட்பத் துறைகள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் எட்டு சதவீத பங்களிப்பை வழங்குகின்றன. இருப்பினும் சீனப் பொருளாதாரத்தின் அளவைக் கருத்தில் கொண்டு சீனாவின் தகவல் தொழில்நுட்ப வருவாய் மிக அதிகமாக உள்ளதாக மைக் கூறினார்.

இந்திய ஐடி நிறுவனங்கள் உலகச் சந்தைகளை ஆளும்போது, சீன நிறுவனங்கள் தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்தியுள்ளன என்றார். உலக சர்வதேச சந்தைகளில் கால் பதிக்க சீன நிறுவனங்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என்றார்.