ரணில் விக்ரமசிங்கவின் அழைப்புக்கு தமிழரின் பதில்

ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கின்றார். இதனை எவ்வாறு எதிர்கொள்ளலாமென்பது, தமிழர் பக்கத்திலுள்ள கேள்வி. வழமைபோல் பல பதில்கள் கூறப்படுகின்றன. சமஸ்டியை அடிப்படையாகக் கொண்டு பேச வேண்டுமென்பது ஒரு பதில்.

சமஸ்டியை அடிப்படையாகக் கொள்ளாவிட்டால் பேசவே கூடாதென்பது இன்னொரு பதில். மூன்றாம் தரப்பொன்றின் மேற்பார்வையில் தான் பேசவேண்டுமென்பது இன்னொரு பதில். சமஸ்டியை முன்வைப்பது பிரச்சினையில்லை ஆனால் இன்றைய சூழலில் கையாளக்கூடிய விடயங்களை கையாளும் வகையில்தான் பேச வேண்டுமென்பது இன்னொரு பதில்.

இவற்றுள் எது சரியான பதில்? எது சரி அல்லது பிழையென்னும் கேள்விக்கு பதிலை தேடுவதற்கு முன்பதாக, தமிழரின் இன்றைய நிலைமையை நோக்குவோம்.

 

 

எந்தவொரு இறுதி தீர்மானத்திற்கும் வருவதற்கு முன்னரும் நமது பலம் மற்றும் பலவீனங்களை, நமக்கு முன்னாலுள்ள சவால்களை, அந்த சவால்களை வெற்றிகொள்வதற்கான வாய்புக்களை துல்லியமாக ஆராய்ந்துகொள்வது அவசியம். முதலில் ஒரு விடயத்தை தெளிவாக குறித்துக் கொள்வோம்.

அதாவது, நமது இதுவரையான அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்திருக்கின்றன. உள்நாட்டுக்குள் பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்கான முயற்சிகளும் தோல்வியடைந்திருக்கின்றன.

 

 

வெளிநாடுகளின ஆதரவில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளும் தோல்வியடைந்திருக்கின்றன. இந்தத் தோல்விகளிலிருந்து நாம் எதனை கற்றுக் கொண்டிருக்கின்றோம்? இந்தத் தோல்விகள் இரண்டு விடயங்களை எமக்கு கற்றுத்தந்திருக்கின்றன.

ஒன்று, பலமான நிலையிலிருக்கும் சிங்களவர்களும் பலவீனமான நிலையிலிருக்கும் தமிழர்களும் ஒரு பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்து, பிரச்சினைகளை சாதகமாக தீர்த்துக்கொள்ள முடியாது. இரண்டு, ஒரு நியாயமான அரசியல் தீர்விற்கு வெளியாரின் ஆதரவு கட்டாயமானது.

இந்த இரண்டு படிப்பினைகளிலிருந்தும்தான், நாம் ஒவ்வொரு விடயங்களையும் அணுக வேண்டியிருக்கின்றது. மேற்படி இரண்டு படிப்பினைகளிலிருந்தும் விடயங்களை ஆராய்வோம்.

ரணில் விக்ரமசிங்கவின் அழைப்புக்கு தமிழரின் பதில்..! | Tamil S Response To Ranil Wickramasinghe Call

சிலர், இந்த இடத்தில் ஓர் எதிர் கேள்வியையும் முன்வைக்கலாம். ஏன் சிங்களவர்களும் தமிழர்களும் இணைந்து பிரச்சினைகளை தீர்க்க முடியாது? பதில் அவ்வாறான முயற்சிகள் அனைத்துமே தோல்வியடைந்திருக்கின்றன. இதற்கு பண்டா – செல்வா உடன்பாடு தொடக்கம் ரணில், மைத்திரி ஆட்சிக்காலம் வரையில் தெளிவான சான்றுகளாகும்.

இதனையும் தாண்டி, சிங்களவர்களும் தமிழர்களும் வெளியாரின் தலையீடின்றி, பேசுவதாயின், அந்தப் பேச்சுவார்த்தையில், சிங்கள ஆளும் வர்க்கத்தின் கருணையே முதன்மையாக இருக்கும்.

 

சிங்களவர்களது கருணையின் எல்லைதான், தமிழர்களுக்கான தீர்வாகும். ஏனெனில் அவர்களை நிர்பந்திப்பதற்கான எந்தவொரு பலமும் தமிழர்களிடம் இல்லை. அவர்களது கருணையை நம்பி ஒரு பேச்சுவார்த்தையை முன்னெடுக்க முடியுமா?

ரணில், மைத்திரி ஆட்சிக்கால பேச்சுவார்த்தைகள் அவ்வாறானதொரு அணுகுமுறையில்தான் முன்னெடுக்கப்பட்டது. எவரதும் தலையீடில்லாமல், வெறுமனே ரணில் விக்ரமசிங்கவோடும் இன்னும் சிலரோடும் பேசிவிட்டால் பிரச்சினைகளை தீர்த்துவிடலாமென்று தான் சம்பந்தன் தரப்பு கருதியது. ஆனால் அது நடைபெறவில்லை.

அது நடைபெறாது என்பதை ஏற்கனவே இந்த கட்டுரையாளர் குறிப்பிட்டிருந்தார். இந்த படிப்பினையிலிருந்து சிந்தித்தால் வெளியாரின் அழுத்தம் கட்டாயமானது.

இந்த இடத்தில் எழும் அடுத்த கேள்வி, அந்த வெளியார் யார்? வெளியாரின் தலையீட்டை ஏற்படுத்துவது எவ்வாறு? தமிழரின் தேசிய இனப்பிரச்சினை வரலாற்றில் இரண்டு வகையான வெளித் தலையீடுகள் இதுவரையில் நிகழ்ந்திருக்கின்றன. இந்த இரண்டு தலையீடுகளின் போதும் சிங்கள ஆளும் வர்க்கம் சில விடயங்களில் கீழிறங்கிவந்தது.

இந்த இரண்டு தலையீடுகளின் போதும் தமிழ் தேசிய அரசியல் ஆயுதபலத்துடனிருந்தது. சிங்களவர்களை நிர்பந்திக்கும் பலத்துடன் தமிழர்கள் இருந்தனர். ஆனால் இப்போதைய நிலைமை முற்றிலும் மாறானது. வெளியாரின் மேற்படி இரண்டு தலையீடுகளுக்குமிடையில் ஒரு அடிப்படையான வேறுபாடுமுண்டு.

அதாவது, இந்தியாவின் தலையீடு முற்றிலும் இந்தியாவின் தலையீடு மட்டும்தான். அதற்கு ஒரு பிராந்தியதன்மை மட்டுமேயுண்டு. ஆனால் நோர்வேயின் மத்தியஸ்தம் அப்படியல்ல. அது பல மேற்குலக நாடுகளை இணைத்தது. இலங்கையின் இனப்பிரச்சினையை மேற்குலகின் பார்வைக்குள் கொண்டுசென்றது.

இதில் இந்தியா முற்றிலுமாக விலகியிருந்தது. ஆனாலும், விடயங்கள் ஒவ்வொன்றையும் புதுடில்லிக்கு தெரியப்படுத்தும் பணியை, நோர்வே முன்னெடுத்திருந்தது. பேச்சுவார்த்தை காலத்தில், எரிக் சூல்கெய்ம் புதுடில்லியுடன் நெருங்கிச் செயற்பட்டிருந்தார்.

புதுடில்லியின் கரிசனைகள் தொடர்பில் சூல்கெய்மிடம் தெளிவான பார்வையிருந்தது. இதனை அவர் பல்வேறு சந்தர்பங்களில் குறிப்பிட்டிருக்கின்றார்.

நோர்வேயின் மத்தியஸ்த அரசியல் ரீதியில் பிறிதொரு கோணத்திலும் நோக்கலாம். அதாவது, பிராந்திய சக்தியான இதியாவின் அரசியல் தீர்வு முயற்சிகள் தோல்விடைந்திருக்கும் நிலையில், அதனை நோர்வே-மேற்குலகின் மத்தியஸ்தத்தின் கீழ், சரிசெய்யும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

ஆனால் ஆரம்பத்திலிருந்தே இந்த முயற்சியில் நோர்வே வெற்றிபெறப் போவதில்லையென்னும் பார்வையே புதுடில்லியிடம் இருந்தது.

 

 

இந்த பேச்சுவார்தை முயற்சி தொடர்பில், அப்போதைய வெளிவிவகார அமைச்சர் ஜஸ்வந் சிங்காவுடனான சந்திப்பின் போது, அவர் சூல்கெய்முக்கு தெரிவித்த கருத்துக்களே இதற்கு சான்றாகும்.

இதில் பத்துவருடங்களை செலவழித்தாலும் கூட, நீங்கள், ஒரு பங்களிப்பை வழங்கியவர்களாக மட்டுமேயிருக்க முடியும், ஏனெனில், இந்த பிரச்சினை அந்தளவு சிக்கலானதென்று சிங்கா கூறியிருந்தார். அவர் கூறியதன் தார்பரியத்தை, தான், பின்னர் உணர்ந்து கொண்டதாக, சூல்கெய்ம் கூறுகின்றார்.

நோர்வேயின் தலையீட்டிற்கு சட்டபூர்வமான தகுதியில்லை. ஏனெனில், அது முரண்பாடுள்ள இரண்டு தரப்புக்களுக்கிடையிலான உடன்பாடாக மட்டுமேயிருந்தது.

 

 

எப்போது யுத்தம் மீளவும் ஆரம்பித்ததோ, அப்போதே நோர்வேயின் தலையீடு முடிவுக்குவந்துவிட்டது. ஒரு வேளை, ரணில் பிரபா உடன்பாட்டுக்கு மாறாக, ஒரு மூன்றாம்தரப்பு இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டிருந்தால், அந்த உடன்பாட்டின் பெறுமதி வேறாக இருந்திருக்கும். இந்த இடத்தில்தான் இந்திய, இலங்கை ஒப்பந்தம் தனித்துவமானதாக இருக்கின்றது.

ஏனெனில் இந்தியா, இலங்கை ஒப்பந்தம் இரண்டு நாடுகளின் தலைவர்களுக்கிடையிலானது. அதனால்தான், அது இப்போதும் பேசப்படும் ஒன்றாக இருக்கின்றது. இந்திய-இலங்கை ஒப்பந்தம் நிரந்தரமானது. வேறு எந்தவொரு தரப்பிற்கும் இவ்வாறானதொரு இடமில்லை.

உதாரணமாக அமெரிக்காவை எடுத்துக் கொண்டால், அதன் ஈடுபாடுகள் அனைத்துமே, மனித உரிமைகள் தொடர்பிலான உலகளாவிய கரிசனையை அடிப்படையாகக் கொண்டதாகும்.

இந்த எல்லைக்குள்தான் அமெரிக்கா விடயங்களை கையாளும். இந்த பின்புலத்தில் சிந்தித்தால், ஒரு புதிய மூன்றாம்தரப்பு என்பதும் சாத்தியமான ஒன்றாக தெரியவில்லை.

 

 

ஏனெனில் ஒரு மூன்றாம் தரப்பு என்பது முரண்பாடுள்ள இரண்டு தரப்புக்களும் இணைந்து அழைத்தால் மட்டுமே சாத்தியப்படும். இரண்டு தரப்பின் அழைப்பில் தான் ஒரு வெளிநாடு இலங்கையின் விவகாரத்தில் பங்களிக்க முடியும். நிச்சயமாக கொழும்பு அதனை ஆதரிக்காது.

இந்த நிலையில் தமிழர்கள் மட்டும் மூன்றாம் தரப்பை கோருவது, வெறும் ஒரு கோரிக்கையாக மட்டுமேயிருக்கும். இந்த இடத்தில் என்ன செய்வது? ஆனாலும் மூன்றாம் தரப்பை அணுகுவதற்கு ஒரு வழியண்டு. அது இந்திய இலங்கை ஒப்பந்தமாகும்.

 

 

இந்த ஒப்பந்தம்தான் ஈழத் தமிழர்களை பொறுத்தவரையில் மூன்றாம் தரப்பாகும். இந்த ஒப்பந்தத்தை கையிலெடுக்கும் போது, அதன் மூலம் இந்தியாவின் ஆலோசனையை கோரலாம். இதனை கோருவதற்கு ஈழத் தமிழர்களுக்கு உரித்துண்டு.

ஏனெனில் ஈழத் தமிழர்கள் சார்பில் இந்தியாவே கையெழுத்திட்டிருக்கின்றது. இந்த அடிப்படையில் இந்தியாவை அணுகும் போது, கொழும்பும் ஒரு கட்டத்திற்கு மேல் அதனை தடுக்க முடியாது.

ஏனெனில் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில், அதற்கான உரித்து இந்தியாவிற்குண்டு. இந்த அடிப்படையில் சிந்தித்தால், இந்திய இலங்கை ஒப்பந்தமானது ஒரே நேரத்தில், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்விற்கான பேச்சுவார்த்தையின் அடிப்படையாகவும் இருக்க முடியும், அதே வேளை, ஒரு மூன்றாம்தரப்பாகவும் தொழிற்பட முடியும்.

இதனையே தமிழர்கள் தங்களின் பலமாக பிரயோகிக்க வேண்டும். ரணிலின் அழைப்புக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டுமென்னும் கேள்விக்கான பதிலை, இந்த இடத்திலிருந்துதான் நாம் நோக்க வேண்டும்.

ரணிலின் அழைப்பிற்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டுமென்னும் கேள்விக்கான பதில் ஒன்றுதான். அதாவது, சமஸ்டிப்படையில் பேசுவதை விடுத்து, இந்திய இலங்கை ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தைகான ஆரம்பப் புள்ளியாக கைக்கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில், மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும், அரசியலமைப்பின் 13இலுள்ள விடயங்களை அமுல்படுத்த வேண்டும்.

அடுத்தது, மாகாண சபை சட்டத்தை திருத்தியமைக்க வேண்டும். அதனை சதாரண பாராளுமன்ற பெரும்பாண்மையின் கீழ் முன்னெடுக்க முடியும். இவ்வாறான விடயங்களை ஒரு நிபந்தனையாக முன்வைக்க வேண்டியதில்லை. மாறாக, எதிர்கால பேச்சுவாத்தைக்கான நல்லிணக்க அரசியல் முன்னெடுப்புக்களாக கோரமுடியும்.

 

 

இவற்றை கொழும்பு முன்னெடுத்துக் கொண்டு செல்லும் போது, மேற்கொண்டு விடயங்களை பேசலாமென்று கூறவேண்டும். இந்த அடிப்படையில்தான் ரணிலுக்கான தமிழரின் பதில் அமைய வேண்டும். அவ்வாறில்லாது அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவியென்னும் அடிப்படையில் விடயங்களை கையாள முற்பட்டால், மீளவும் தமிழர்கள் வெறுங்கையுடன்தான் திரும்ப வேண்டியேற்படும்