மக்களாதரவு இல்லாத இந்த அரசாங்கத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்காது – ஜி.எல்.பீரிஸ்

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைப்பது வெறும் கானல் நீராகவே காணப்படுகிறது. மக்களாதரவு இல்லாத இந்த அரசாங்கத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்காது இதன் காரணமாகவே தேர்தலை நடத்துமாறு தொடர்ந்து வலியுறுத்துகிறோம் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

நாவல பகுதியில் சுதந்திர மக்கள் காங்கிரஸ் காரியாலயத்தில் திங்கட்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மாத்திரம் தீர்வு காண முடியும் .அவருக்கு சர்வதேசத்தின் அங்கீகாரம் உண்டு என்ற புகழாரங்கல் திட்டமிட்ட வகையில் சமூகமயப்படுத்தப்பட்டுள்ளன. குறுகிய காலத்தில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் என்று வெறும் ஊடக பிரசாரத்திற்கு மாத்திரம் வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காக பேச்சுவார்த்தை கடந்த ஜூன் மாதம் முதல் முன்னெடுக்கப்படுகிறது, ஆனால் இதுவரை ஒரு டொலர் கூட கிடைக்கப்பெறவில்லை.சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைப்பது வெறும் கானல் நீராக உள்ளது.

நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு அவசியம் என்பதை சர்வதேசம் தொடர்ந்து வலியுறுத்துகிறது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கு மக்களாணை கிடையாது மக்கள் ஆதரவு இல்லாத அரசாங்கத்திற்கு சர்வதேசம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தினால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியுமா என கேள்வி எழுப்பும் அரசியல்வாதிகளின் மனிநிலையை ,கல்வி நிலையை ஆராய வேண்டும்.இலங்கை ஒரு ஜனநாயக நாடு ,ஜனநாயக கொள்கை அமைய செயற்பட வேண்டிய கட்டாயமாகும்.

நாட்டில் அரசியல் பிரச்சினை காணப்படுகிறது அதற்கு தேர்தல் ஊடாகவே தீர்வு காண முடியும்.நாட்டு மக்கள் தமக்கான அரச நிர்வாக கட்டமைப்பை தெரிவு செய்துள்ளார்கள் என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துரைப்பதற்காகவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்துமாறு தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

எல்லை நிர்ணய அறிக்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தடையாக அமையாது என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.அவர் மீது நம்பிக்கை உள்ளது ஆனால் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளோம் என்றார்.