நாட்டை முன்னேற்றுவதற்குள்ள ஒரேயொரு மாற்று வழி ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே – சஜித்

நாட்டில் தற்போதுள்ள நிலைமையை மாற்றுவதற்குள்ள ஒரேயொரு மாற்றுவழி ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமேயாகும். தொழில் வல்லுனர்களின் ஆலோசனைகளுக்கு செவி சாய்க்காமல், வக்கிரமான முறையிலேயே இந்த அரசாங்கம் செயற்படுகிறது. அதன் காரணமாகவே நாடு வங்குரோத்தடைந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அக்கரைபற்று வைத்தியசாலைக்கு சனிக்கிழமை (டிச. 24) மருத்துவ உபகரணங்கள் சிலவற்றை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உரிய நேரத்தில் நிலக்கரியை இறக்குமதி செய்யுமாறு மின்சாரதுறை சார் வல்லுனர்கள் வலியுறுத்தியுள்ளனர். அவ்வாறில்லை எனில் நீண்ட மின் துண்டிப்பிற்கு செல்ல நேரிடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆனால் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்று நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்திலுள்ள மூன்றில் ஒரு இயந்திரம் செயலிழந்துள்ளது. நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரி முற்பதிவு செய்யப்படவில்லை.

தொழில் வல்லுனர்களின் ஆலோசனைக்கு செவி சாய்க்காமல் இந்த அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளுக்கு சிறந்த உதாரணம், மின்சார முகாமைத்துவமாகும்.

நாட்டில் கொள்ளை குடும்பமொன்றின் ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு மக்கள் பொறுப்பு கூற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஊழல் மோசடியற்ற நாடாக இலங்கையை மாற்றியமைப்பதற்குரிய பலம் ஐக்கிய மக்கள் சக்தியிடமே காணப்படுகிறது. அந்த பொறுப்பினை நாம் நடைமுறைப்படுத்துவோம். ஒற்றுமையை எமது பலமாக்கி நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்றார்.